Published : 05 May 2025 06:30 AM
Last Updated : 05 May 2025 06:30 AM
சென்னை: சென்னையில் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் மேற்கொள்ளும் இடங்களில் மாசு ஏற்படுத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் மாநகராட்சி உருவாக்கியுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் மே 21-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை, வரும் மே 21-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி, ஒரு ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட புதிய கட்டுமானம் அல்லது கட்டிட இடிபாடுகள் மேற்கொள்ளும் போது 6 மீட்டர் உயரத்துக்கும், ஒரு ஏக்கருக்கும் அதிமான தள பரப்பளவு கொண்ட இடங்களை சுற்றி 10 மீ உயரத்தும் தகரம் அல்லது உலோகத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
இப்பணிகளின்போது வெளிவரும் தூசித் துகள்கள் பரவுவதைத் தடுக்க அதிக அடர்த்தி கொண்ட துணி, தார்ப்பாய், இரட்டை அடுக்கு பச்சை வலை போன்றவற்றால் மூடப்பட்டிருக்க வேண்டும். அப்பகுதிகளில் தண்ணீர் தெளித்து தூசி உற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை மாநகராட்சியின் கட்டுமான மற்றும் இடிபாட்டுக் கழிவு மேலாண்மை வழிகாட்டுதல்களின்படி பிரிக்கப்பட்டு வாகனங்களில், மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட கட்டுமான மற்றும் இடிபாட்டுக் கழிவு மேலாண்மை தளங்களுக்கு பிரிக்கப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட வேண்டும்.
இக்கழிவுகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களும், தூசிகள் பரவுவதைத் தடுக்க தார்பாலின் மூலம் மூடப்பட்டிருக்க வேண்டும். இக்கழிவுகளை கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களின் சக்கரங்களையும் தானியங்கி இயந்திரம் மூலம் தண்ணீர் கொண்டு கழுவுதல் வேண்டும். கட்டிடம் கட்டுவோர், சிசிடிவி காண்காணிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி, தேவைப்படும்போது மாநகராட்சியின் ஆய்வுக்கு சமர்பிக்க வேண்டும்.
உயரமான கட்டிடத் திட்ட இடங்களில் (18.5 மீட்டருக்கு மேல்) சென்சார் அடிப்படையிலான காற்று மாசை கண்டறியும் கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்த வேண்டும்.
மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவு உள்ள கட்டுமான தளங்களுக்கு ரூ.5 லட்சம் வரையும், 500 சதுர மீட்டருக்கு மேல் 20 ஆயிரம் சதுர மீட்டருக்குள் உள்ள கட்டுமான தளங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையும், 300 சதுர மீட்டர் முதல் 500 சதுர மீட்டர் வரை ரூ.10 ஆயிரம் வரையும் அபராதம் விதிக்கப்படும்.
விதிகளை பின்பற்றாத 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு அதிகமான கட்டுமான தளங்களுக்கு ரூ.1 லட்சம், 20 ஆயிரம் சதுர அடி வரை ரூ.10 ஆயிரம், 300 முதல் 500 சதுர அடிவரை ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
விதிமீறல்கள் ஏற்பட்டால், அதை சரி செய்ய எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு, 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகு 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகும் சரி செய்யாவிட்டால் கட்டுமான நடவடிக்கைகள் நிறுத்தப்படும். இந்த விதிகள் வரும் மே 21-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT