தாராபுரம் அருகே பாலம் பணிக்காக தோண்டிய குழியில் பைக் விழுந்து தம்பதி உயிரிழப்பு: சிறுமிக்கு தீவிர சிகிச்சை

விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ். (உள்படம்) உயிரிழந்த நாகராஜ், ஆனந்தி.
விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ். (உள்படம்) உயிரிழந்த நாகராஜ், ஆனந்தி.
Updated on
1 min read

தாராபுரம்: வெளியூர் சென்று விட்டு இரவில் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்ததில் தம்பதி உயிரிழந்தனர். சிறுமி படுகாயம் அடைந்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் சூரியநல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி நாகராஜ்(40), ஆனந்தி(35). இவர்களது மகள் தீக்ஷிதா(15). மூவரும் குடும்பத்துடன் திருநள்ளாறு கோயிலுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று விட்டு நேற்று இரவு அவர்களது வீட்டிற்கு திரும்பினர்.

தாராபுரத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கிளம்பிய அவர்கள் குள்ளாய்பாளையம் பாலத்தில் வந்தபோது, பாலத்துக்காக தோண்டப்பட்டு தடுப்புகள் அமைக்கப்படாத பள்ளத்தில் இருட்டில் நிலை தடுமாறி விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த நாகராஜ், ஆனந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுமி தீக்ஷிதா படுகாயங்களுடன் கிடந்தார்.

நீண்ட நேரத்துக்கு பின் அவ்வழியாக வந்தவர்கள் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமி தீஷிதா மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து குண்டடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

முதல்​வர் நிவாரணம்: இச்சம்பவத்தை அறிந்த தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு ரூ.1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் மற்றும் துறை அதிகாரிகளுடன் சென்று விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் காயமடைந்த சிறுமிக்கு தேவையான சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in