சகாயம் ஐஏஎஸ்​-க்கு சிறப்பு பாதுகாப்பு தர வேண்டும்: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

சகாயம் ஐஏஎஸ்​-க்கு சிறப்பு பாதுகாப்பு தர வேண்டும்: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சகாயம் ஐஏஎஸ்-க்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சகாயம் ஐஏஎஸ், மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியராக பணியாற்றியபோது தொழில்துறை செயலருக்கு எழுதிய கடிதத்தின் வழியே, 2012-ம் ஆண்டில் மிகப்பெரிய கிரானைட் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

அதில் மதுரை மாவட்டத்தில் இயங்கும் பல கருங்கல் குவாரிகள் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார். அதைத்தொடர்ந்து கிரானைட் மற்றும் கனிம மணற்கொள்ளை பற்றி விசாரிக்க சகாயம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் 2014-ல் உத்தரவிட்டது.

இதற்கிடையே கடந்த 2013-ம் ஆண்டு சகாயம் ஐஏஎஸ், தன்னை கொலை செய்யப்போவதாக மிரட்டல்கள் வருவது குறித்து தமிழக அரசின் தலைமை செயலரை சந்தித்து முறையிட்ட நிலையில், அவருக்கு ஆயுதமேந்திய தனிப்படையை பாதுகாப்புக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் திமுக அரசு 2023-ம் ஆண்டு அதை தன்னிச்சையாகத் திரும்ப பெற்றுக்கொண்டது. தற்போது 2014-ல் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு அறிக்கையை தாக்கல் செய்வது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதத்தில் நீதிமன்ற அழைப்பாணை வந்த நிலையில், அண்மைக்கால அச்சுறுல்களின் காரணமாக நேரில் செல்ல மறுத்திருக்கிறார் சகாயம்.

வளக்கொள்ளையை தடுக்க போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, நெல்லை காவல்துறை அதிகாரி ஜாகிர் உசேன் போன்றவர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவங்களை கண்ட பின்னரே, விசாரணைக் குழுவின் பதிலைத் தாக்கல் செய்வதற்கு சகாயம் தயக்கம் காட்டியிருக்கிறார்.

சகாயத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவருக்கு சிறப்பு பாதுகாப்பை அரசு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in