Published : 04 May 2025 04:18 PM
Last Updated : 04 May 2025 04:18 PM
தாம்பரம்: தாம்பரம் அடுத்த திருமுடிவாக்கம் அருகே பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பயணித்த கார் திடீரென பழுதானதால் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நிறுத்தப்பட்ட நிலையில், பின்னால் பாதுகாப்புக்கு வந்த வாகனங்கள் அடுத்தத்து மோதி விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்துக்கு வந்த நிலையில், நேற்று முன்தினம் வேலூரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, இரவு மீண்டும் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, ஜே.பி.நட்டா பயணம் செய்த காரில் இருந்து திடீரென சத்தம் வந்ததால் காரை புறவழிச்சாலையில் நிறுத்தினர்.
மேலும், பாதுகாப்புக்காக வந்த வாகனங்களும் அடுத்தடுத்து சாலையில் நிறுத்தப்பட்டன. இதில், பின்னால் வேகமாக வந்த இரண்டு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி, லேசான விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜே.பி. நட்டா உடன் வந்த காரில் உடனடியாக பழுது நீக்க முடியாததால், பாதுகாப்புக்கு வந்த மாற்று வாகனத்தில் ஏறி சென்னை விமான நிலையம் சென்றார்.
வேலூரில் இருந்து வருவதற்கு காலதாமதம் ஆனதாலும், உரிய நேரத்தில் விமான நிலையம் செல்ல வேண்டும் என்பதற்காகவும் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்தி கார் சென்ற நிலையில், திடீரென காரில் பழுது ஏற்பட்டதால், மாற்று வாகனத்தில் பாஜக தேசிய தலைவர் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT