சுதந்திர போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கக் கோரி வழக்கு: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சுதந்திர போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கக் கோரி வழக்கு: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சுதந்திர போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்குவது குறித்து பரிசீலிக்குமாறு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் வி.கே.செல்லம் தாக்கல் செய்த மனுவில், “இந்திய ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீட்டில் ஒரு சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. நானும் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவன். இந்நிலையில் எனக்கு தியாகிகளுக்கான இட ஒதுக்கீட்டில் வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்க கோரி அரசுக்கும், வீட்டு வசதி வாரிய தலைவருக்கும் மனு கொடுத்தேன். எனது மனு பரீசிலிக்கப்படவில்லை.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எனது மனுவை பரிசீலிக்குமாறு கடந்த 2021-ல், அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வீட்டு வசதி வாரியத்துக்கு (தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாடு துறை) மீண்டும் 2025 பிப்ரவரி 10-ம் தேதி மனு கொடுத்தேன். எனது மனுவை வீட்டு வசதி வாரிய தலைவர் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி நிராகரித்து உத்தரவிட்டார். எனவே, எனது மனுவை நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனக்கு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஒதுக்கீட்டில் வீடு ஒதுக்குமாறு வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விஷயத்தில் அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மனுதாரருக்கு வீடு ஒதுக்கீடு செய்யலாம். எனவே, மனுதாரரின் மனுவை பரிசீலித்து அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீட்டில் சட்டத்திற்கு உட்பட்டு 8 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in