அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்

அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்
Updated on
1 min read

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை (மே 4) தொடங்குகிறது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு - மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 3) ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 8-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மே 6-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் பழநி, திருப்பூர் மாவட்டம் பல்லடம், நல்லதங்காள் நீர்த்தேக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 84 டிகிரி முதல் 100 டிகிரி, ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. இது மே 28-ம் தேதி வரை நீடிக்கிறது. பொதுவாக, இந்த காலகட்டத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கும். ஆனால், சமீபகாலமாக அக்னி நட்சத்திர காலகட்டத்தில் பரவலாக பல பகுதிகளில் கோடை மழை பொழிந்து குளிர்ச்சியை கொடுத்து வருகிறது. தற்போதும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அக்னி நட்சத்திரம் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய பதிவுகளில் தரவுகள் ஏதும் இல்லை’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in