பொதுமக்களுக்கு இலவச தற்காப்பு பயிற்சி: சர்வதேச கராத்தே பயிற்றுநர்கள் சங்கம் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை:“பொதுமக்களுக்கு சுயபாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, இலவச தற்காப்பு பயிற்சி அளிக்கப்படும்” என்று, சர்வதேச கராத்தே பயிற்றுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் எஸ்.பாலமுருகன் இன்று (மே 2) சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எங்களது கராத்தே சங்கம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகளவில் 55 நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்டது. நமது முன்னோர்கள் நமக்கு தந்து சென்ற பாதுகாப்பான சமுதாயத்தை நமது வருங்கால சந்ததியினருக்கு கொடுப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.

தொழில்நுட்பத்தில் மிகவும் நவீனமயமான இந்த உலகில் தனிமனிதனின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. பொதுமக்களின் சுயபாதுகாப்பு அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே, பொதுமக்களுக்கு இலவச தற்காப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 5 ஆயிரம் கராத்தே மாஸ்டர்கள் 8 கோடி பேருக்கு இலவச தற்காப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.

முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், கோவா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பொதுமக்களுக்கு இந்த இலவச தற்காப்பு கலை பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். இப்பயிற்சி வரும் ஜூலை மாதம் தொடங்கும்.

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகளில் இப்பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் http://bit.ly/safersociety என்ற இணையதளத்திலும், 97909 94917 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இப்பயிற்சியில் சுயபாதுகாப்பை விரும்புவர்கள் தாமாக முன்வந்து சேர வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in