உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது: முதல்வர் வழங்கினார்

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு 2025-ம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு 2025-ம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Updated on
2 min read

சென்னை: உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருது மற்றும் 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 2) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் தமிழகத்தில் உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருதினையும், டிஎன்பிஎஸ்சி மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

மூன்று நபர்களுக்கு நம்மாழ்வார் விருது வழங்குதல்: 2023-2024 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை-உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும், ஊக்குவிக்கும் மற்றும் பிற உயிர்ம விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசால் இயற்கை வேளாண்மையை விவசாயிகளிடம் பெருமளவில் கொண்டு சேர்த்த “நம்மாழ்வார்” பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அவ்வகையில் 2024-ம் ஆண்டு மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, 2025-ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருது, உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த க.சம்பத்குமாருக்கு முதல் பரிசாக 2.50 லட்சம் ரூபாய் மற்றும் ரூ.10,000 மதிப்பிலான பதக்கமும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த த.ஜெகதீஸுக்கு இரண்டாம் பரிசாக 1.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் ரூ.7,000 மதிப்பிலான பதக்கமும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வே.காளிதாஸுக்கு மூன்றாம் பரிசாக 1 லட்சம் ரூபாய் மற்றும் ரூ.5,000 மதிப்பிலான பதக்கமும், தமிழக முதல்வர் இன்றையதினம் வழங்கி சிறப்பித்தார்.

151 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்குதல்: வேளாண்மை - உழவர் நலத்துறை சார்ந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், அரசின் வேளாண் திட்டங்கள் கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையிலும், காலியாகவுள்ள பணியிடங்கள் படிப்படியாக விரைந்து நிரப்பப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை வேளாண்மை-உழவர் நலத்துறையில் டிஎன்பிஎஸ்சி வாயிலாக பல்வேறு வகையான தொழில்நுட்ப மற்றும் அமைச்சுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட 1,799 நபர்களுக்கும், பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் 265 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், என மொத்தம் 2,064 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், தற்போது டிஎன்பிஎஸ்சி மூலம் 76 இளநிலை உதவியாளர்கள், 68 தட்டச்சர்கள் மற்றும் 7 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் என மொத்தம் 151 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு தமிழக முதல்வர் இன்றைய தினம் பணிநியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் வ. தட்சிணாமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் த. ஆபிரகாம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல்பாண்டியன், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் இரா. முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in