Published : 23 Jul 2018 02:35 PM
Last Updated : 23 Jul 2018 02:35 PM

தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டுகள் குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்கத் தயங்கினால் நீதிமன்றத்தை நாடுவோம்: ஸ்டாலின் பேட்டி

தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டுகள் குறித்து தமிழக ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து, தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டுகள் குறித்தும், சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீடுகளில் நடைபெற்ற ரெய்டுகள் குறித்தும் உடனடி விசாரணை நடத்திட வேண்டுமென புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடத்தில் அவர் பேசிய விவரம் பின்வருமாறு:

இன்று ஆளுநரைஅவர்களை திமுக சார்பில் சந்தித்து, அண்மையில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை தொடர்பாக அவரிடத்திலே ஒரு மனுவை வழங்கியிருக்கிறோம். வருமான வரித்துறை சோதனைக்கு ஆளாகியிருக்கக்கூடிய நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் நாகராஜன், செய்யாதுரையின் நிறுவனங்களுக்கு மட்டும் சுமார் 3,120 கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழக அரசின் நெடுஞ்சாலை துறையினுடைய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மற்றும் அவருடைய மாமனார் சுப்பிரமணியம் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.

தொடர்ந்து ஏழு வருடங்களாக நெடுஞ்சாலைத்துறையை, பொதுப்பணித் துறையை கையில் வைத்திருக்கக்கூடியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னுடைய உறவினர்களுக்கு மட்டும் பல கோடி ரூபாய் ஒப்பந்தங்களை கொடுத்து அதனால் அவர்கள் இன்றைக்கு வருமான வரித்துறை சோதனையில் சிக்கியிருக்கின்றனர்.

எனவே, இதுகுறித்து உடனடியாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி விசாரணையை நடத்திட வேண்டுமென்று ஆளுநரிடத்திலே ஒரு புகார் மனுவை வழங்கியிருக்கிறோம். இதுதவிர, மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்காக பல கோடி ரூபாய்களை தமிழக அரசுக்கு ஒதுக்கிக் கொண்டிருக்கிறது.

அப்படி ஒதுக்கக்கூடிய திட்டங்களில் முதல்வர் மட்டுமல்ல, பல அமைச்சர்களும் மெகா ஊழலில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இதுகுறித்தும் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான முயற்சியிலே ஆளுநர் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம்.

இதனை சம்பந்தப்பட்ட துறைக்கும், அதன் அதிகாரிகளுக்கும் அனுப்புவதோடு, மத்திய உள்துறைக்கும் இதை நான் அனுப்பி வைக்கிறேன் என்று ஆளுநர் உறுதி தந்திருக்கிறார். இப்பிரச்சினையில் ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஒருவேளை நடவடிக்கை எடுக்கத் தயங்கினாலோ, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலோ நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என்பதையும், ஆளுநரிடத்தில் சொல்லியிருக்கிறோம்.

உங்களுடைய புகாருக்கு ஆளுநரின் பதில் என்னவாக இருந்தது?

எங்களுடைய புகாரை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கிறோம் என்று உறுதியளித்திருக்கிறார். அந்த உறுதியின் அடிப்படையில் மட்டுமல்ல, நடவடிக்கை நிச்சயம் எடுக்க வேண்டுமென்றும் நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம். அப்படி எடுக்கவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடப்போகிறோம்.

ஏற்கெனவே பலமுறை நீங்கள் ஆளுநரைச் சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளீர்கள், அப்போதெல்லாம் எந்த ஒரு நடவடிக்கையும், பதிலும் ஆளுநர் தரப்பிலிருந்து வரவில்லை. இப்போதும் சந்தித்து புகாரளித்து இருக்கிறீர்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறீர்களா?

ஆளுநர் தரப்பிலிருந்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் புகார் மனுவை தயார் செய்து அவரிடத்திலே கொடுத்திருக்கிறோம். உரிய வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொன்னால், நாங்கள் நீதிமன்றத்தை நாடப்போகிறோம் என்பதையும் அவரிடத்தில் சொல்லிவிட்டு வந்திருக்கிறோம்.

உங்கள் குற்றச்சாட்டு இப்படி இருக்கும் பொழுது, அதே ஆட்களுக்கு தான் திமுகவும் ஒப்பந்தம் கொடுத்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறாரே?

திமுக ஆட்சியில், ஒப்பந்தங்கள் கொடுத்தபோது இந்த மாதிரி வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை. குறிப்பாக, இன்றைக்கு போல, உறவினர்களுக்கும், சம்பந்திகளுக்கும், மாமனார்களுக்கும் திமுக ஆட்சியில் ஒப்பந்தங்கள் கொடுக்கவில்லை. ஆனால், அதிமுக ஆட்சியில் முதல்வருடைய சம்பந்திக்கு, முதல்வருடைய உறவினர்களுடைய பார்ட்னர்களுக்கு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டு, அதனால் தொடர்ந்து வருமான வரித்துறை ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. இதில், ஏறக்குறைய 189 கோடி ரூபாய் பணமாகவும், 100 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அண்ணா மேம்பாலத்திற்கு கீழ் இருக்கக்கூடிய நெடுஞ்சாலைத்துறை அரசு அலுவலகத்திலே 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் அமைச்சர் ஜெயக்குமார் என்ன பதில் சொல்லப் போகிறார்?

சேகர் ரெட்டி பிரச்சினையிலும் இதேபோல் தான் நடந்தது, தமிழகத்தில் நடந்த எந்தவொரு வருமானவரித்துறை சோதனையிலும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லையே?

ராம் மோகன்ராவ் அலுவலகத்தில், சென்னை கோட்டையில் இருக்கக்கூடிய தலைமைச் செயலாளர் அலுவலகத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பட்டுவாடாவில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை ஈடுபட்ட விவகாரங்கள் என எதிலுமே, சரியான முறையில் விசாரணை நடக்கவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இந்த வருமான வரித்துறை சோதனை என்பது, மத்திய அரசினுடைய மிரட்டலுக்காகவும், அச்சுறுத்தலுக்காகவும் தான் நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகங்கள் இருந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் இந்த விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் நீதிமன்றத்திற்கு போவதென்று நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x