Last Updated : 02 May, 2025 05:12 AM

 

Published : 02 May 2025 05:12 AM
Last Updated : 02 May 2025 05:12 AM

பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக செயற்குழு சென்னையில் இன்று கூடுகிறது

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருகிறது.

கூட்டணிக் கட்சிகளும் ஒற்றுமையுடன் உள்ளன. அதேநேரம், பழனிசாமி தலைமையில் அதிமுக தேர்தலை சந்திக்கத் தொடங்கியதில் இருந்து, கூட்டணிக்கு கட்சிகள் வருவதும், போவதுமாக இருந்து வருகின்றன. இதனால் அதிமுக கூட்டணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்தது.

இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் பழனிசாமி உள்ளார். இதற்காக கட்சியினரை உற்சாகப்படுத்தும் விதமாக, ஏற்கெனவே மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, அவர்களிடம் எழுச்சியுரையாற்றி, உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தார்.

அதேபோல், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வேளையில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அசைவ விருந்து வைத்து, அவர்களை தேர்தலுக்கு தயாராகுமாறு ஆலோசனை வழங்கினார்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு செயற்குழு கூட்டம் கூடுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த பின்னர், நடைபெறும் செயற்குழுக் கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இக்கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களைத் தயாரிக்க, முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், வைகைச்செல்வன், டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ்.மணியன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கொண்ட குழுவை பழனிசாமி அமைத்துள்ளார். அக்குழு 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்களைத் தயாரித்துள்ளது. அதில் பெரும்பாலான தீர்மானங்கள் திமுக ஆட்சிக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான, தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநில கழகச் செயலாளர்கள், கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததில் கட்சி நிர்வாகிகள் சிலருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இக்கூட்டத்தில், பாஜகவுன் கூட்டணி வைக்கப்பட்டதை ஏற்காத மூத்த மற்றும் கடைநிலை நிர்வாகிகளிடம் பழனிசாமி கருத்து கேட்க இருப்பதாகவும், பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கான காரணத்தை அவர் விளக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x