''நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் அதானி, அம்பானிக்காக பாஜக அரசு சட்டங்களை இயற்றுகிறது'' - திருமாவளவன் குற்றச்சாட்டு

திருமாவளவன் | கோப்புப்படம்
திருமாவளவன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “உழைக்கும் மக்களின் உரிமைகள் மென்மேலும் நசுக்கப்படும் நிலை தொடர்கிறது. தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவன பெருமுதலாளிகளும் வலுப்பெற்று வருகின்றனர். அதானிகளும் அம்பானிகளும் இங்கே தனிப்பெரும் முதலாளிகளாக வளர்ந்துள்ளனர். அவர்களுக்காகவே இங்குள்ள பாஜக அரசு கொள்கைகளை வரையறுத்து, சட்டங்களை இயற்றி, நாட்டின் வளர்ச்சிக்காக என நடைமுறைப்படுத்தி வருகிறது,” என்று விசிக தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உழைப்பைப் போற்றும் உன்னத நாளான மே நாளில் உலகத் தொழிலாளர்கள் யாவருக்கும் விசிக சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உழைக்கும் மக்களுக்கு எதிரான சுரண்டல் கொடுமை உலகெங்கும் காலமெல்லாம் தொடர்கிறது. அதனை எதிர்த்து உழைக்கும் வர்க்கமும் இடையறாது போராடிக் கொண்டே உள்ளது.

முதலாளித்துவம் வல்லரசியமாகப் பரிணாம வளர்ச்சியுடைந்துள்ளது. ஜனநாயகம் சமூகநீதி போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டே, முதலாளித்துவம் உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் புதிய புதிய வடிவங்களில் தீவிரப்படுத்தி வருகிறது. உழைக்கும் மக்களின் உரிமைகள் மென்மேலும் நசுக்கப்படும் நிலை தொடர்கிறது. தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவன பெருமுதலாளிகளும் வலுப்பெற்று வருகின்றனர்.

இந்தியாவிலும் இந்நிலையைத் தெளிவுறக் காணமுடிகிறது. குறிப்பாக, கார்ப்பரேட் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து வருகிறது. அதானிகளும் அம்பானிகளும் இங்கே தனிப்பெரும் முதலாளிகளாக வளர்ந்துள்ளனர். அவர்களுக்காகவே இங்குள்ள பாஜக அரசு கொள்கைகளை வரையறுத்து, சட்டங்களை இயற்றி, நாட்டின் வளர்ச்சிக்காக என நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஏற்கெனவே நடைமுறையிலிருந்த நாற்பத்து நான்கு வகை தொழிலாளர் நலச் சட்டங்களையெல்லாம் நான்குச் சட்டங்களாகத் தொகுத்துள்ளது. இவை நான்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை முன்னிறுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன. ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்கள் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரையும் ஒடுக்கி முடக்கும் வகையில் இன்றைய பாஜக அரசு இயங்கிவருகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பாதுகாவலர்களாக இந்திய ஆட்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில், இந்திய தொழிலாளர் வர்க்கம் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்கள் யாமனைவரும் ஒருங்கிணைந்து அடிப்படை உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரங்களுக்காகவும் போராட உறுதியேற்போம். உழைக்கும் மக்களை ஒருங்கிணைப்போம். சுரண்டிக் கொழுக்கும் அரசியலுக்குக் குழிபறிப்போம்,” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in