சமூக வலைதளத்தில் சீமானுக்கு கொலை மிரட்டல்: காவல் ஆணையரிடம் புகார்

சமூக வலைதளத்தில் சீமானுக்கு கொலை மிரட்டல்: காவல் ஆணையரிடம் புகார்
Updated on
1 min read

சென்னை: சமூக வலைதளத்தில் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையரிடத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம், அக்கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் புகார் மனு அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது:

தேனி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற நபர் கடந்த 28-ம் தேதி, தனது சமூக வலைதளத்தில், “சீமானின் தலை விரைவில் துண்டாக்கப்படும், அதனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும். நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு இரங்கல் செய்தி வரும், அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவிப்பார்கள். தெலுங்கு பேசும் மக்களை தவறாக பொதுத்தளத்தில் பதிவிட்டால் அதற்கு முழு பொறுப்பு சீமானுக்கே” என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மற்றொரு பதிவில் பட்டா கத்திகளின் படங்களை பதிவிட்டு விரைவில் சம்பவம் என தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை தொடங்கியதில் இருந்து இதுவரை சீமான் தெலுங்கு மக்கள் குறித்தோ, மற்ற எந்த தேசிய இன மக்கள் குறித்தோ இழிவாகவோ, அவதூறாகவோ பேசியது கிடையாது.

எனவே அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சந்தோஷ் என்னும் நபர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அய்யனார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in