Last Updated : 30 Apr, 2025 05:55 PM

 

Published : 30 Apr 2025 05:55 PM
Last Updated : 30 Apr 2025 05:55 PM

ஏஐ, நவீன இயந்திரங்கள் வளர்ச்சியால் 8 மணி நேர வேலையை குறைக்க வலியுறுத்துவோம்: பெ.சண்முகம்

சென்னை: “உற்பத்தி பெருக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, ரோபோ போன்ற நவீன இயந்திரங்களின் வளர்ச்சி காரணமாக 8 மணி நேரம் வேலை என்பதை குறைக்க ஒன்றிய பாஜக ஆட்சியை வலியுறுத்துவோம்.” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 8 மணி நேர வேலைக்காக போராடிய, ரத்தம் சிந்திய, உயிரை இழந்த தொழிலாளர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரமாக வரையறை செய்யப்பட்ட அடிப்படையில், அவர்கள் 8 மணி நேரம் வேலை செய்திருந்தாலும், உற்பத்தி உலக அளவில் பெருகியுள்ளது. உற்பத்தி பெருக்கத்திற்கு தொழிலாளர்களும், அவர்களது நவீன கண்டு பிடிப்புகளும் பேருதவி செய்துள்ளன.. இதை முதலாளிகளும் முதலாளித்துவமும் மறுக்க முடியாது.

இத்தகைய கண்டுபிடிப்புகளையும், உற்பத்தி பெருக்கத்தையும் தனது லாபத்திற்கும், மூலதன பெருக்கத்திற்கும் பயன்படுத்தி கொண்ட முதலாளித்துவம், தொழிலாளர்களை மென் மேலும் சுரண்டுகிற வகையில், சட்டங்களை திருத்தி, உரிமைகளைப் பறிக்க முயற்சிக்கிறது, உழைக்கும் பெண்களுக்கு குறைவான ஊதியம் வழங்கி கூடுதல் உழைப்பைச் சுரண்டுகிறது. இந்த அநீதிகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

8 மணி நேர வேலை என்பதை, உற்பத்தி பெருக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, ரோபோ போன்ற நவீன இயந்திரங்களின் வளர்ச்சி காரணமாக வேலை நேரத்தை குறைக்க ஒன்றிய பாஜக ஆட்சியை வலியுறுத்துவோம். அதேபோல் ஒப்பந்தம், பயிற்சி உள்ளிட்ட தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலுவான போராட்டங்களை முன்னெடுக்கவும் வேண்டும்.

எந்தவித சமூக பாதுகாப்பும் அற்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் சுமார் 2 கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கான சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளான, ஓய்வூதியம், மருத்துவ சிகிச்சை பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்வதை வலியுறுத்திய போராட்டங்கள் தீவிரமாவதை உறுதி செய்வோம்.

ஒன்றிய பாஜக அரசு தொழிலாளர் சட்டங்களை திருத்தி, அதை அமலாக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது. பாஜக ஆட்சியாளர்களின் முதலாளித்துவ கொள்ளை லாபத்திற்கு உதவிடும் சட்டத் திருத்தங்களை முறியடிப்பது மே தின சபதமாக அமையட்டும். அதற்காக மே 20 அன்று நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம். ஒன்றிய அரசின் அலுவலகங்களுக்கு முன் தொழிற்சங்கங்களும், இதர வெகுமக்கள் அமைப்புகளும் நடத்த திட்டமிட்டுள்ள மறியல் போராட்டங்களை பேரெழுச்சியுடன் நடத்திடுவோம்.

வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இருப்பதை, போராட்டங்களே தீர்மானிக்கின்றன என்பதை உணர்ந்து, போராடுவோம், முன்னேறுவோம். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் மே தின தொழிலாளர் பேரணி பொதுக்கூட்டங்கள் சிறக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x