

கேஜ்ரிவாலின் செயல்பாடுகளைக் காங்கிரஸ் கட்சி உற்று கவனித்துவருகிறது என திருக்கோவிலூரில் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
திருக்கோவிலூரில் திருமண விழாவில் பங்கேற்ற மத்திய கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் ஜி.கே.வாசன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது:
காங்கிரஸ் தலைமையில் நிலை யான ஆட்சி அமைய, நாட்டின் ஒருமைப்பாடு, மதசார்பின்மை இவைகளை ஒத்தகருத்தாக வைத்து, வலுவான கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக காங்கிரஸ் வெற்றிபெறும். தமிழக காங்கிரஸ் தலைவராக நான் நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் தவறானது. டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் செயல்பாடு நல்ல முதல்வருக்கு எடுத்துக்காட்டல்ல. அவரின் செயல்பாடுகளை காங்கிரஸ் கட்சி உற்று கவனித்துவருகிறது மக்கள் நலனுக்காகவும் டெல்லி வளர்ச்சிக்காகவும் காங்கிரஸ் அவரை ஆதரிக்கிறது என்றார்.
வீரப்பன் கூட்டாளிகளுக்கு தண்டனை ரத்து செய்துள்ளது போல ராஜீவ் கொலைவழக்கு குற்றவாளி களுக்கும் தண்டனை ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு, குற்றவாளிகள்நீதிமன்றத்தின்படி குற்றவாளிகள்தான். தற்போது தண்டனை குறைக்கப் பட்டுள்ளது. அதில் மாற்று கருத்து இல்லை” என்றார். இலங்கை எல்லையில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்தால் அவர்களைக் கைது செய்வோம் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த வாசன்,” தமிழக மீனவர்கள் மட்டுமல்ல இலங்கை மீனவர்களுக்கும்
இது வாழ்வாதாரப் பிரச்சினை என்பதை அந்நாட்டு அமைச்சர் உணர்ந்து பேச வேண்டும்” என்றார்.