மின்சேவைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிரத்யேக மென்பொருள்: மின்வாரியத்துக்கு உத்தரவு

மின்சேவைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிரத்யேக மென்பொருள்: மின்வாரியத்துக்கு உத்தரவு
Updated on
1 min read

சென்னை: “புதிய மின்இணைப்புகள் உட்பட அனைத்து சேவைகளுக்கும் மின்வாரிய இணையதளம் மூலமாகவே எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் மென்பொருளை உருவாக்க வேண்டும்” என, மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மின்விநியோகம் செய்யும் பணியை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. இதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன், மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் அண்மையில் ஆய்வு நடத்தினர். அதில், ஆணையம் மின்வாரியத்துக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி, புதிய மின்இணைப்புகள் உட்பட அனைத்து சேவைகளுக்கும் மின்வாரிய இணையதளம் மூலமாகவே விண்ணப்பங்களை பெற வேண்டும். எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் மென்பொருளை உருவாக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது சந்தேகம் எழுந்தால் அதற்கான விடை தெரிய கேள்வி, பதிலுடன் கூடிய மென்பொருளை உருவாக்க வேண்டும். தாழ்வழுத்தப் பிரிவில் இடம் பெறும் தொழிற்சாலைகளில் உச்சநேர மின்பயன்பாட்டை கணக்கெடுக்க அதற்குரிய மீட்டரை உடனே பொருத்த வேண்டும். கட்டுமானப் பணி முடிந்ததும் தற்காலிக இணைப்பில் இருந்து நிரந்தர வகைக்கு இணைப்பு மாற்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், அனைத்து வகை விண்ணப்பங்களுக்கும் விண்ணப்பதாரர் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டிய ஆவணத்தின் அதிகபட்ச அளவு போதுமானதாக இல்லை. குறைந்தது 5 எம்.பி. அளவுக்கு அதிகரிக்க வேண்டும். மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின்விநியோகம் துண்டிக்கப்படும். வீடுகளில் யாரும் இல்லாத நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவரம் நுகர்வோருக்கு தெரிவதில்லை.

சில நாட்களுக்குப் பின் கட்டணம் செலுத்தும் போது, அதிக அபராதத்துடன் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.
எனவே, மின்கட்டணம் துண்டிக்கப்படும் பட்சத்தில் அதற்கான காரணத்துடன் அந்த விவரத்தை எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்-அப் மூலம் நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும், என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in