Last Updated : 30 Apr, 2025 01:31 PM

 

Published : 30 Apr 2025 01:31 PM
Last Updated : 30 Apr 2025 01:31 PM

போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது நடவடிக்கை: மதுரை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர் காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அமலன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கறிஞர் அறை எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனது வழக்கறிஞர் அறைக்கு சென்றபோது எனது பெயரில் கடிதம் ஒன்று வந்தது. அதை பிரித்து படித்தபோது, காவல்துறை கண்காணிப்பாளர் மீது நான் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்ததாகவும், அந்த புகாருக்கு நான் நேரில் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இருந்து சம்மன் வந்திருந்தது தெரியவந்தது.

இதைப் பார்த்து எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. நான் இதுபோன்று எந்தவித புகாரையும் கொடுக்கவில்லை. எனவே இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அப்போது தான் எனக்கு நடந்தது போல் பல வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்களின் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திய பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு போலியான புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அந்த புகார்கள் குறித்து உரிய விசாரணை நடந்து வருவதும் தெரியவந்தது.

இதுபோன்று பிற வழக்கறிஞர்கள் பெயர்களை பயன்படுத்தி புகார்கள் அனுப்புவதால், மூத்த வழக்கறிஞர்கள் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் தனிப்பட்ட பகைமை உண்டாகிறது. மேலும் உயர் அதிகாரிகளின் நேரமும் வீணடிக்கப்படுகிறது. எனவே பிறர் பெயரை பயன்படுத்தி போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “இந்த புகார் போல அரசு வழக்கறிஞர்களுக்கு எதிராகவும் அரசு வழக்கறிஞர்கள் பெயரை பயன்படுத்தியும் பல புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கும் இது போன்று புகார் சென்றுள்ளன. இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, “பிறர் பெயரை பயன்படுத்தி போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது மதுரை மாநகர் காவல் ஆணையார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும.” என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x