முறையாக அனுமதிபெற்று கட்டப்படும் வழிபாட்டு தலத்துக்கு தடையாக உள்ள சக்திகள் அடக்கப்படும்: அமைச்சர் நாசர் தகவல்

முறையாக அனுமதிபெற்று கட்டப்படும் வழிபாட்டு தலத்துக்கு தடையாக உள்ள சக்திகள் அடக்கப்படும்: அமைச்சர் நாசர் தகவல்
Updated on
1 min read

சென்னை: ‘‘முறையாக அனுமதி பெற்று கட்டப்படும் வழிபாட்டு தலங்களுக்கு தடையாக இருக்கும் சக்திகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும்’’ என, சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில், நேற்று நடைபெற்ற பொதுத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறைகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். கிள்ளியூர் தொகுதி உறுப்பினர் எஸ்.ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) பேசும்போது, ‘‘தமிழகத்தில் கிறஸ்தவர்கள் 10 சதவீதமும், இஸ்லாமியர்கள் 9 சதவீதமும் என ஏறக்குறைய 20 சதவீதம் பேர் மதச் சிறுபான்மையினராக உள்ளனர். தேவாலயங்கள், மசூதிகள் கட்ட அனுமதி கிடைப்பதில்லை. குறிப்பாக, கன்னியாகுமரியில் பட்டா நிலங்களில் மசூதிகள், தேவலாயங்கள் கட்ட அதிகாரிகள் அனுமதி வழங்குவதில்லை’’ என்றார்.

அதற்கு பதில் அளித்துப் பேசிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மதவழிபாட்டு தலங்களை கட்ட தடை ஏற்படுவதாக உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்கலும் பட்டா நிலங்களில் மதவழிபாட்டு தலங்கள் அமைப்பதற்கான தடையில்லா சான்று, மதவழிபாட்டு தலங்கள் அமைக்கப்படும் இடத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் இருக்கும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியர் மூலம் அரசு பொது சட்டம் மற்றும் ஒழுங்கு துறை மூலமாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்படி, வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

மேலும், மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டிடத்துக்கு அனுமதி பெற்று வழிபாட்டு தலங்களை அமைக்கலாம். இதற்கு தடையாக எந்த சக்திகள் இருந்தாலும் அதை இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in