Published : 30 Apr 2025 07:03 AM
Last Updated : 30 Apr 2025 07:03 AM

முஸ்லிம் நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: ஜீவனாம்ச வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: காஜி , காஜியத் மற்றும் ஷரியா போன்ற முஸ்லிம் நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை எனவும், அவை பிறப்பிக்கும் உத்தரவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது’’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முஸ்லிம் பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். கணவர் மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.50,000 வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். எதுவும் கிடைக்காததால் காஜியாத் நீதிமன்றம் மூலம் தலாக் பெற்றுள்ளார்.

அதன்பின் விவகாரத்து பெற்ற பெண், ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால், தனியாக வாழ்வதற்கு மனைவியே காரணம் என கூறி ஜீவனாம்சம் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் ஜீவனாம்சக் கோரிக்கையை நிராகரித்ததால், அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இந்த மனு நீதிபதிகள் சுதான்சு துலியா, அஷானுதீன் அமனுல்லா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் 2014-ல் வழங்கிய தீர்ப்பை சுட்டிக் காட்டி நீதிபதிகள் கூறியதாவது:

காஜி நீதிமன்றம், ஷரியா நீதிமன்றம் போன்றவற்றுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை. அவைகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது. அதை அமல்படுத்தவும் முடியாது ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. ஷரியா நீதிமன்றங்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே செல்லுபடியாகும். அது மூன்றாம் நபருக்கு பொருந்தாது.

இரண்டாவது திருமணம் என்பதால் வரதட்சனைக்கு வாய்ப்பிலை என காரணம் கூறி குடும்ப நல நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜீவனாம்சத்தை மறுத்துள்ளன. இந்த முடிவுகள் எல்லாம் சட்டப்படியானது அல்ல, யூகத்தின் அடிப்படையிலானது.

நீதிமன்றம் என்பது ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகள் குறித்து சமூகத்துக்கு போதிக்கும் ஒரு நிறுவனம் அல்ல. மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.50,000 கேட்டு மனைவியை கணவர் கொடுமை படுத்தி விவகாரத்து செய்துள்ளார். அவர் மனைவிக்கு மாதம் ரூ.4,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x