Published : 30 Apr 2025 05:31 AM
Last Updated : 30 Apr 2025 05:31 AM
சென்னை: காவல், சிறைத் துறை, தீயணைப்புத் துறைக்கு புதிதாக 3,363 காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் கூறியிருப்பதாவது: கோவை - நீலாம்பூர், சிவகங்கை - கீழடி, திருநெல்வேலி - மேலச்செவல், திருப்பூர் - பொங்கலூர், கள்ளக்குறிச்சி - களமருதூர், நாமக்கல் - கொக்கராயன்பேட்டை, திருவண்ணாமலை - திருவண்ணாமலை கோயில், மதுரை - சிந்தாமணி மற்றும் மாடக்குளம் ஆகிய பகுதிகளில் புதிதாக காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.
கன்னியாகுமரி குழித்துறையில் புதிதாக இருப்புப்பாதை காவல் நிலையமும், சென்னையில் திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகம், பெரம்பூர் பெரியார் நகர் புறநகர் மருத்துவமனை ஆகிய பகுதிகளில் புறக்காவல் நிலையங்களும் ஏற்படுத்தப்படும். சென்னை அரும்பாக்கம் சரகத்தில் புதிதாக அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படும்.
உத்திரமேரூர், வேளாங்கண்ணி, நாமக்கல் பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக காவல் உட்கோட்டம் உருவாக்கப்பட உள்ளது. சென்னை காவலில் நுண்ணறிவுப் (உளவு) பிரிவில் புதிதாக திட்டமிட்ட குற்றப்பிரிவு உருவாக்கப்படும். மயிலாடுதுறை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் 2 தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலகுகள் ரூ.4.04 கோடியில் உருவாக்கப்படும்.
காவலர் குடியிருப்புகள்: கூடுதலாக 280 காவல் ஆய்வாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, சார்பு ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்கள், ஆய்வாளர் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும். நாகப்பட்டினம், திருப்பூர், திருச்சி, திருவாரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் புதிய காவல் கட்டிடங்கள் கட்டப்படுவதோடு பழைய கட்டிடங்கள் பழுதுபார்க்கப்படும். அதோடு 321 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்.
கோவையில், தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு ரூ.5.98 கோடியில் அலுவலகம் கட்டப்படும். அதோடு காவல்துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கப்பட உள்ளன. ஆண்டுதோறும் வழங்கப்படும் அண்ணா பதக்கங்கள் 100-லிருந்து 150 ஆக உயர்த்தப்படும். இதேபோல், தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களின் எண்ணிக்கையை 3 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரமாக உயர்த்துவதுடன மாதாந்திரப் பதக்க படியும் உயர்த்தி வழங்கப்படும்.
காவலர்கள் பதவி உயர்வுக்கான ஆண்டுகள் குறைக்கப்பட்டு, இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேர்ந்த 23 ஆண்டுகளிலேயே சிறப்பு சார்பு ஆய்வாளராக தரம் உயர்த்தப்படுவார்கள். மேலும், காவல், சிறைத்துறை, தீயணைப்புத் துறைக்கு புதிதாக 3,363 காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதேபோல் தடய அறிவியல் துறையை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கள் ரூ.16.80 கோடியில் நிறுவுதல், ரூ.5.60 கோடியில் தீயணைப்பு நிலையங்களை தரம் உயர்த்துதல், ரூ.9 கோடியில் புதிய வாகனங்கள் வாங்குதல், ரூ.15 கோடியில் புதிதாக 15 சிறிய நுரை தகர்வு ஊர்திகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. தீயணைப்புத் துறைக்கு திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட மத்திய மண்டலத்தை 2 ஆகப் பிரித்து விழுப்புரத்தில் புதிய மண்டலம் உருவாக்கப்படும். இவை உட்பட 102 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT