Published : 30 Apr 2025 05:16 AM
Last Updated : 30 Apr 2025 05:16 AM
சென்னை: உள்ளாட்சி இடைத்தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் (திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைத் தவிர) நடைபெறவுள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கூட்டரங்கில் மாநில தேர்தல் ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி, இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் (மாவட்ட ஆட்சியர்கள்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலர் கி.பாலசுப்பிரமணியம், மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன், முதன்மை தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்) வெ.மகேந்திரன், முதன்மை தேர்தல் ஆணையர் (நகராட்சிகள்) என்.விஸ்வநாதன் மற்றும் மாநில தேர்தல் ஆணைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT