வைரலாகும் நெல்லையப்பர் கோயில் வளாக ரீல்ஸ்: செயல் அலுவலர் போலீஸில் புகார்

நெல்லையப்பர் கோயில்  | கோப்புப் படம்
நெல்லையப்பர் கோயில் | கோப்புப் படம்
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலியிலுள்ள பிரசித்தி பெற்ற அருள்தரும் காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத இருவர் திரைப்பட பாடலுக்கு ஆடி ரீல்ஸ் பதிவு செய்த காட்சிகள் வைரலானது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோயில் செயல் அலுவலர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இத்திருக்கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் மற்றும் இளம்பெண் ஆகிய இருவரும் திரைப்பட பாடலுக்கு ஆடி ரீல்ஸ் பதிவு செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இது பக்தர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. புனிதமான கோயில் வளாகத்தில் இவ்வாறு அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் திருக்கோயில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் போலீஸில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். திருநெல்வேலி நகர் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் வளாகத்தில் ரீல்ஸ் செய்து அடையாளம் தெரியாத இருவர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து அந்த வீடியோ காட்சிகள் தற்போது பரவி வருகிறது.

புனிதமான இடமான சுவாமி நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற அநாகரிகமான செயல்களை கோயிலில் செய்ய வேண்டாம் எனவும் புகைப்படம் வீடியோ உள்ளிட்டவைகள் எடுக்க ஏற்கெனவே அமலில் உள்ள நடவடிக்கைகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் செயல் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in