Published : 29 Apr 2025 09:04 AM
Last Updated : 29 Apr 2025 09:04 AM

வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை: தமிழக அரசு பரிசீலனை

கோப்புப்படம்

சென்னை: வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க பரிசீலிக்கப்படும் என சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தி.வேல்முருகன் எம்எல்ஏ பேசும்போது, "வெளிமாநிலத் தொழிலாளர்களால் தமிழகத்தில் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதனால் அவர்கள் என்ன பணிக்காக வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள், எந்த நிறுவனத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள், எப்போது மாநிலத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல, வெளிமாநிலத்தவர் வருகையை கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்" என்றார். அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் பேசும்போது, "வெளி மாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அளித்த பதில்: ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வெளி மாநில தொழிலாளர்கள் வருகையை பதிவு செய்வதற்கான போர்ட்டல்கள் உள்ளன. அதன் வழியாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகம், உதவி ஆணையர் அலுவலகங்களிலும் வெளி மாநில தொழிலாளர் வருகை பதிவு செய்யப்படுகிறது. நகைக்கடை மற்றும் மளிகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோரும், தங்கள் கடைகளில் பணியில் சேர்த்துக்கொள்ளப்படும் வெளி மாநில தொழிலாளர் விவரங்களை பதிவு செய்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்து அரசு சார்பில் பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x