Published : 29 Apr 2025 06:19 AM
Last Updated : 29 Apr 2025 06:19 AM

அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்பு: ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

ஆளுநர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சராக மனோ தங்கராஜுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்துவைத்தார். உடன் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர்.

அமைச்சரவையி்ல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள மனோ தங்கராஜுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வரின் பரிந்துரைப்படி அவருக்கு பால்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளான செந்தில் பாலாஜி மற்றும் சைவம், வைணவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடி ஆகிய இருவரும் அமைச்சர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்துறையை அமைச்சர் சிவசங்கருக்கும், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையை முத்துசாமிக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பால்வளத் துறைக்கு பதிலாக, பொன்முடி கவனித்து வந்த வனம். காதி துறையை வழங்கவும் ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். அமைச்சரவையில் மனோ தங்கராஜை மீண்டும் சேர்க்குமாறும் பரிந்துரை செய்திருந்தார்.

தமிழக அமைச்சரவையை 6-வது முறையாக மாற்றம் செய்வது தொடர்பாக முதல்வரின் பரிந்துரைகளை ஆளுநர் அன்றைய தினமே ஏற்றுக்கொண்டார். பதவியேற்பு நிகழ்வு 28-ம் தேதி மாலை நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, ராஜ்பவனில் உள்ள பாரதியார் அரங்கில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்டோர் மாலை 5.58-க்கு வந்தனர். ஆளுநர் ஆர்.என்.ரவி 6 மணிக்கு வந்தார். அவரை முதல்வர் வரவேற்றார். மனோ தங்கராஜை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநரிடம் அனுமதி பெற்ற தலைமைச் செயலர் நா.முருகானந்தம், பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு உறுதிமொழி ஏற்க வருமாறு மனோ தங்கராஜை அழைத்தார். தொடர்ந்து, அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆவணத்தில் கையெழுத்திட்ட பிறகு, ஆளுநர், முதல்வருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் இதில் பங்கற்றனர். 6.01 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 6.07 மணிக்கு முடிவடைந்தது.

இதன்பின்னர், ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முதல்வரின் பரிந்துரையை ஏற்று, அமைச்சர் டி.மனோ தங்கராஜுக்கு பால்வளத் துறை ஒதுக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பால்வளத் துறை அமைச்சராக மனோ தங்கராஜ் இருந்த நிலையில், அமைச்சரவையில் இருந்து கடந்த ஆண்டு அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் அதே துறை ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x