

ரவுடி வெள்ளைக்காளி கூட்டாளியை என்கவுன்ட்டர் செய்த காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் 2 வாரங்களுக்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி திமுக முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி சகோதரியின் மகன் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் கூட்டாளி சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சுபாஷ் சந்திரபோஸ் ஏப். 1-ல் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
என் மகன் சுபாஷ் சந்திர போஸ், கோவில்பட்டி போலீஸார் பதிவு செய்த வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று கடந்த மார்ச் 19-ல் சிறையிலிருந்து வெளியே வந்தார். என் மகன் மீது வேறு எந்த வழக்கும் இல்லை.
இந்நிலையில் கடந்த மார்ச் 22-ல் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் என் மகனை ஆஸ்டின்பட்டி போலீஸார் மார்ச் 30-ல் சென்னையில் கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்தனர். கடந்த ஏப்ரல் 1-ம் தேதி போலீஸ் பிடியிலிருந்து தப்ப முயன்றதாக, என் மகனை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
போலீஸார் என் மகனை கைது செய்த பிறகு சட்டவிரோதமாக சிறையில் அடைத்து துன்புறுத்தியுள்ளனர். மகனின் உடலில் காயங்கள் இருந்தன. இது தொடர்பாக மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, ஜெய்ஹிந்த்புரம் காவல் ஆய்வாளர் பூமிநாதன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், என்கவுன்ட்டர் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி தனது உத்தரவில், என்கவுன்ட்டர் கொலை தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் 2 வாரங்களில் உரிய முடிவெடுக்க வேண்டும். வழக்கு முடிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.