பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு திருவல்லிக்கேணியில் போலீஸார் அனுமதி மறுப்பு

திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தில் தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், போலீஸார் அதற்கு அனுமதி மறுத்து, பந்தல், எல்இடி திரைகளை அகற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தில் தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், போலீஸார் அதற்கு அனுமதி மறுத்து, பந்தல், எல்இடி திரைகளை அகற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
Updated on
2 min read

சென்னை: திருவல்லிக்கேணியில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடக்க இருந்த பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பந்தல், எல்இடி திரைகள், உணவு பொருட்களை பறிமுதல் செய்து போலீஸார் எடுத்து சென்றனர்.

பிரதமர் மோடியின் 121-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழக பாஜக சார்பில் மாநில செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் சென்னை திருவல்லிக்கேணி நடுக்குப்பம் அவ்வை சண்முகம் சாலையில் மனதின் குரல் நிகழ்ச்சியை பொதுமக்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.

ஆனால், போலீஸார் அதற்கு திடீரென அனுமதி மறுத்து, சாலையில் அமைக்கப்பட்டிருந்த பந்தல், மேடை, எல்இடி திரை மற்றும் ஒலிபெருக்கிகளை அங்கிருந்து அகற்றி பறிமுதல் செய்தனர். மேலும், ஆயிரம் பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சைவ, அசைவ உணவையும் போலீஸார் வாகனங்களில் ஏற்றி சென்றனர். இதனால், பாஜகவினருக்கும் போலீஸாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் பிரதமரின் நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டும் என்பதற்காக, ராயப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாஜகவினர் விரைவாக செய்தனர். அங்கு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொதுமக்களுடன் அமர்ந்து பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டார். துணை தலைவர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது, புதிதாக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு மீன்பிடி வலைகளால் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. சிறிய அளவிலான படகும் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சைவ, அசைவ உணவுகள் பறிமாறப்பட்டன. அப்போது செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

ஓராண்டுக்கு முன்பு நடுக்குப்பம் பகுதியில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சிக்கு போலீஸார் அனுமதி வழங்கினர். ஆனால், இந்த ஆண்டு இணை ஆணையர் விஜயகுமார் அனுமதி மறுத்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதி என்பதால் அனுமதி மறுத்துள்ளார்களா? காவல்துறையின் இதுபோன்ற செயல் கண்டனத்துக்குரியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தயவு செய்து எந்த அடக்குமுறையையும் செயல்படுத்த நினைக்காதீர்கள்.

ஆட்சி நிரந்தரம் கிடையாது: மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இதுபோன்ற செயல்களால் மாற்றிடலாம் என்று நினைக்க வேண்டாம். ஆட்சி உங்களுக்கு நிரந்தரம் கிடையாது. கூட்டணிக்கு அழைத்த அதிமுக, தவெக கதவுகளை மூடிவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறுகிறார்.

திருமாவளவன் ஒரு கூட்டணியில் உள்ளார். அவர் எப்படி அதிமுக கூட்டணியின் கதவுகளையும், தவெக தலைவர் விஜய்யின் கூட்டணி கதவுகளையும் மூட முடியும். அவர் வீட்டின் கதவுகளை அவர் மூடிக் கொள்ளட்டும். அடுத்தவர் கூட்டணி கதவுகளை மூட திருமாவளவன் யார்? அடுத்தவர் வீடு குறித்து அவர் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in