போக்​கு​வரத்து துறை ஓய்​வூ​தி​யர்​களுக்கு அகவிலைப்​படி உயர்த்த அரசு முடிவு

போக்​கு​வரத்து துறை ஓய்​வூ​தி​யர்​களுக்கு அகவிலைப்​படி உயர்த்த அரசு முடிவு
Updated on
1 min read

சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரை குடும்ப ஓய்வூதியம் பெறும் 20 ஆயிரம் பேர் உட்பட சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அளிக்கும்போதும், ஓய்வூதியர்களுக்கு அந்த பலன் கிடைப்பதில்லை. இதுதொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களை ஓய்வூதியர்கள் முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், அண்மையில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, 119 சதவீதத்துடன் அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டவர்களுக்கு கூடுதலாக 27 சதவீதமும், 5 சதவீதம் அகவிலைப்படி பெறுவோருக்கு கூடுதலாக 9 சதவீதமும் உயர்வு வழங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் குறைந்தபட்சமாக ரூ.1300, அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் 14 சதவீதம் அகவிலைப்படி பெறுவோருக்கு கூடுதலாக 16 சதவீதமும், 146 சதவீதம் பெறுவோருக்கு கூடுதலாக 48 சதவீதமும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, குறைந்தபட்சமாக ரூ.2300, அதிகபட்சமாக ரூ.21,679 கிடைக்கும். இந்த உயர்வு வரும் மே மாத ஓய்வூதியத்திலிருந்து கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in