Published : 27 Apr 2025 02:16 PM
Last Updated : 27 Apr 2025 02:16 PM

தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்படுகின்றன: சிபிஎம் குற்றச்சாட்டு

ஶ்ரீவில்லிபுத்தூர்: தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் விதிமீறி அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை வெட்டி எடுப்பதும், அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக கனிம வளங்களை எடுத்தல் உள்ளிட்ட அத்துமீறல்கள் அதிகாரிகள் துணையுடன் தொடர்ந்து வருவதாக, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டினார்.

மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலை பணிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் கடந்த 2023-ம் ஆண்டு கல் குவாரி அமைக்கப்பட்டது. கல் குவாரியால் மேய்ச்சல் நிலம் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியவில்லை எனக்கூறி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று காலை கல்குவாரியை பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ''அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்குவாரியால் விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களிலும், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளனர். இந்த குவாரி மூலம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வழக்கை காரணம் கூறாமல் மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிம வளத்துறை தலையிட்டு இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் விதிமீறி அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை வெட்டி எடுப்பதும், அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக கனிம வளங்களை எடுத்தல் உள்ள விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். அரசின் அனுமதி பெற்று நடைபெறும் தொழில்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை அனுமதிக்க முடியாது.

மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கிவிட்டு வசூல் என்ற பெயரில் அத்துமீறி பெண்களை துன்புறுத்துவதால் தற்கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று உள்ளது. கடன் வழங்கிவிட்டு கட்டாய வசூலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய சட்டத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. பட்டாசு தொழிலில் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க வேண்டும். பட்டாசு விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் சிவகாசி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும்,'' இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x