மத்திய அரசு பணியில் சேருவோருக்கான காவல்துறை சரிபார்ப்பை டிஜிட்டல் மயமாக்க அன்புமணி கோரிக்கை

மத்திய அரசு பணியில் சேருவோருக்கான காவல்துறை சரிபார்ப்பை டிஜிட்டல் மயமாக்க அன்புமணி கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: மத்திய அரசு பணியில் சேருவோருக்கான காவல்துறை சரிபார்ப்பை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'மத்திய அரசுப் பணிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணிகளில் சேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பணியாளர்களின் நடத்தை குறித்த காவல்துறை சான்று பெறுவதற்கு மாதக் கணக்கில் தாமதம் ஏற்படுவதால், அவர்களால் குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும் கூட பணிநிலைப்பும், ஊதிய உயர்வும் பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடிய இத்தகைய அணுகுமுறையை அனுமதிக்க முடியாது.

மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சேருவோருக்கு 6 மாதங்கள் அல்லது ஓராண்டு காலம் தகுதி காண் பருவமாகக் கருதப்பட்டும். இந்த காலத்தில் அவர்களின் நடத்தைக் குறித்து அவர்கள் வாழும் மாநிலங்களின் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்தியாவின் பல மாநிலங்களில் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை தாக்கல் செய்யும் முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பதால் உரிய காலத்தில் அந்த அறிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைகளின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஆனால், தமிழ்நாட்டில் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கையை தயாரித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை ஆள்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசின் ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகத்தில் பணியாற்றும் ஒருவரின் நடத்தை சரிபார்ப்பு அறிக்கை தாக்கல் செய்யப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால் அவரது தகுதி காண் காலம் மேலும் ஒன்றரை ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு, அவருக்கு பணி நிலைப்பு வழங்கப்படுவது தாமதமானது.

காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை வழங்குவது மிக முக்கியமான பணி ஆகும்.அதில் செய்யப்படும் தாமதத்தால் பணியாளர்கள் தொடங்கி நிறுவனங்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் பல வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைக் களைய வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறையை டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in