

சென்னை: மறைந்த உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் திருத்தந்தை போப் பிரான்சிஸ் உடலுக்கு வாடிகன் சென்று அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் இருதயராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து அரசு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் திருத்தந்தை போப் பிரான்சிஸ் உடல் நலக் குறைவால் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்ததும் மிகவும் வேதனையடைந்தார். அதனைத் தொடர்ந்து விடுத்த இரங்கல் செய்தியில், ‘பரிவோடும் முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கச் திருச்சபையினை வழிநடத்தி பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை போப் பிரான்சிஸ் மறைவு குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
போப் பிரான்சிஸ் , இரக்க மிகுந்தவராக, முற்போக்குக் குரலாக பணிவு. அறநெறிசார் துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருப்பீடத்தை வழிநடத்தினார். வறியவர் மீதான அர்ப்பணிப்பு, புறக்கணிப்பப் பட்டவர்களுக்கான அரவணைப்பு. நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடலுக்கான அவரது முன்னெடுப்புகள் ஆகியவை கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்கு பெரும் மரியாதையை பெற்றுத் தந்தன.
இரக்கம் மிகுந்த செயல்கள், மனிதநேயத்தில் நிலைகொண்ட மதநம்பிக்கை எனும் வளமான மரபினை அவர் விட்டுச் சென்றுள்ளார்’ என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் . சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு சார்பில் இரங்கல் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றிய பின், மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
அத்துடன் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகிய இருவரையும் ரோம் நகர் வாடிகன் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் நேரிடையாக அஞ்சலி செலுத்தி வருமாறு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவினை ஏற்று, அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகிய இருவரும் ரோம் நகர் சென்று வாடிகனில் நேற்று (25.04.2025) நடைபெற்ற கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.