Published : 26 Apr 2025 10:24 AM
Last Updated : 26 Apr 2025 10:24 AM
சென்னை: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், அறிவியலாளருமான கஸ்தூரி ரங்கன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ள இரங்கல் செய்தி:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன், விண்வெளி ஆய்வில் இந்தியா மிகப் பெரும் உயரங்களை அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றியவர். மாநிலங்களவை உறுப்பினர், திட்டக்குழு உறுப்பினர், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் என பல உயர்நிலைகளிலும் தனது அறிவாற்றலால் அந்தபொறுப்புகளுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சியில் கஸ்தூரி ரங்கன் ஆற்றிய அர்ப்பணிப்பு நிறைந்த பங்கு என்றும் நினைவுகூரப்படும். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: இந்தியாவின் பெருமைமிகு ராக்கெட்டான பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி விண்ணில் ஏவப்பட்டதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. அவரது மறைவு விண்வெளித் துறைக்கு பெரும் இழப்பாகும்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: இஸ்ரோ முன்னாள் தலைவரும் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் வடிவமைப்புக் குழுவின் தலைவருமான டாக்டர் கஸ்தூரி ரங்கன் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. ஒரு விஞ்ஞானியாக நம் தாய்நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவை அளப்பரியது.
பாமக தலைவர் அன்புமணி: இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர் கஸ்தூரி ரங்கன். மேற்குத் தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பதற்காக கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்து அளித்த பரிந்துரை அறிக்கை வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை: நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இஸ்ரோ தலைவராகவும், தேசியக் கல்வி கொள்கை வடிவமைப்புக் குழு தலைவராகவும், மேலும் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றிய கஸ்தூரி ரங்கன் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரோ வளர்ச்சிக்கு வித்திட்டவர்: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது: மறைந்த கஸ்தூரி ரங்கன் ஒரு எக்ஸ்ரே வானியலாளராக தனது பயணத்தை தொடங்கி படிப்படியாக முன்னேறி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறைகளில் சாதனைகளை படைத்து முத்திரை பதித்துள்ளார்.
அவர் தலைவராக இருந்த 9 ஆண்டுகளில் சோதனை கட்டத்தில் இருந்த பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் உட்பட பல்வேறு விண்வெளி ஆய்வுத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இதுதவிர கஸ்தூரி ரங்கனின் தொலைநோக்கு அணுகுமுறையால் இஸ்ரோ துணிச்சலுடன் வணிக ரீதியான செயல்பாடுகளில் இறங்கியது.
இது இஸ்ரோவை வல்லரசு நாடுகளின் வரிசையில் ஒரு முழுமையான விண்வெளி ஆய்வு நிறுவனமாக மாற்றியது. 1982 முதல் 2003-ம் வரை 21 ஆண்டுகள் அவருடன் பணியாற்றினேன். என் மீது அவர் வைத்த நம்பிக்கையால்தான் சந்திரயான் திட்டத்தின் இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அவருடன் பல்வேறு தருணங்களில் இணைந்து பணியாற்றியது எனக்கு சிறந்த அனுபவங்களை வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT