Published : 26 Apr 2025 06:35 AM
Last Updated : 26 Apr 2025 06:35 AM

திரு​வாலங்​காடு அருகே ரயில் தண்​ட​வாள பகு​தி​யில் போல்ட் நட்​டு​கள் அகற்​றம்: ரயில்வே போலீ​ஸார் தீவிர விசா​ரணை

திருவாலங்காடு அருகே விரைவு ரயில் செல்லும் தண்டவாள பகுதியில் மர்ம நபர்களால் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டதை நேற்று சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்டோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

திரு​வள்​ளூர்: திருவாலங்காடு அருகே ரயில் தண்டவாள பகுதியில் இரு வேறு இடங்களில் போல்ட் நட்டுகள் மர்ம நபர்களால் அகற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம், தொடர்பாக ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், நாள்தோறும் சென்னையிலிருந்து, மும்பை, பெங்களூரு, மங்களூரு, மைசூரு, திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல், இந்த மார்க்கத்தில், நாள்தோறும் சென்னையிலிருந்து, திருத்தணி வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

நாள்தோறும் லட்சக்கணக்கானோர் ரயில் பயணம் செய்யும் சென்னை-அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்டம்- மோசூர் ரயில் நிலையத்துக்கும் இடையே அரிசந்திராபுரம் என்ற இடத்தில், சென்னை நோக்கி விரைவு ரயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் நேற்று அதிகாலை 1:14 மணிக்கு திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டது ரயில்வே ஊழியர்களுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து ரயில்வே ஊழியர் (பாயின்ட் மேன்) செந்தில்குமார், சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தில் அதிகாலை 1:40 மணிக்கு பார்வையிட்டார். அப்போது, அந்த தண்டவாள இணைப்பு பகுதியில் போல்ட் நட்டுகள் மர்ம நபர்களால் கழற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, திருவாலங்காடு ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை நோக்கி செல்லும் விரைவு ரயில்கள் சென்னை நோக்கி மின்சார ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் இயக்கப்பட்டன. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேலும், அரிசந்திராபுரம் பகுதியில் சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் ஒரு போல்ட்டில் நட்டுகள் மட்டும் மர்ம நபர்களால் கழற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, தகவல் அறிந்த, தெற்கு ரயில்வே சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஈஸ்வரராவ், ரயில்வே போலீஸ் ஐஜி பாபு, திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாச பெருமாள் உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். பிறகு மோப்ப நாய் ஜான்சி, கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பகுதிகளில் மர்ம நபர்களால் கழற்றப்பட்ட போல்ட் நட்டுகளுக்கு பதில் புதிய போல்ட் நட்டுகளை பொருத்தி, தண்டவாளம் மற்றும் சிக்னல் இணைப்புகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, நேற்று காலை 9 மணியளவில் சென்னையை நோக்கி விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள அரக்கோணம் ரயில்வே போலீஸார், 3 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி, போல்ட் நட்டுகளை கழற்றிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x