Published : 26 Apr 2025 06:10 AM
Last Updated : 26 Apr 2025 06:10 AM
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீனாக கே.சாந்தாராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசியாவின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை திகழ்கிறது. சென்னை மருத்துவக் கல்லூரியுடன் (எம்எம்சி) இணைந்துள்ள இம்மருத்துவமனையில் 3,800 படுக்கை வசதிகள் உள்ளன.
மொத்தமுள்ள 42 துறைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தினமும் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 500 பேர் உள்நோயாளிகளாக அனுமதியாகின்றனர்.
அதேபோல், தினமும் 400-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புகின்றனர். இந்த மருத்துவமனையின் கீழ் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை ஆகியவை செயல்படுகின்றன.
இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீனாக இருந்த தேரணிராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையின் டீனாக சுமார் 5 ஆண்டுகள் இருந்த தேரணிராஜன், மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்துதல், கரோனா தொற்றை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளார்.
தற்போது மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராக இருந்த கே.சாந்தாராமன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்துள்ள மருத்துவர் சாந்தாராமன் 34 ஆண்டுகள் மருத்துவத் துறையில் அனுபவம் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT