Published : 26 Apr 2025 05:30 AM
Last Updated : 26 Apr 2025 05:30 AM
சென்னை: போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 39-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. ராணுவ மருத்துவ சேவைகள் துறையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரீன் சிறப்பாக தேறிய 29 மாணவர்களுக்கு 40 தங்க பதக்கங்களை வழங்கினார். எம்பிபிஎஸ் மாணவி வி.சஞ்சனா 5 தங்கப் பதக்கங்களை பெற்றார்.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் மருத்துவம், பொறியியல் மற்றும் மேலாண்மை துறைகளில் 637 முனைவர், முதுநிலை, இளநிலை மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அவருடன் இணை வேந்தர் ஆர்.வி.செங்குட்டுவன் இணைந்து சான்றிதழ்களை அளித்தார்.
விழாவில் வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரீன் பேசியதாவது: தற்போது தொழில்நுட்ப பயன்பாட்டால் சிகிச்சை முறைகள் பெரிதும் மேம்பட்டுள்ளன. மருத்துவர்கள் அறநெறி. பரிவோடு நோயாளிகளின் குறைகளை கூர்ந்து கேட்டறிந்து, அவர்களை கண்ணியத்தோடு அணுக வேண்டும்.
நாம் தற்போது பாரம்பரிய முறைகளுடன், தொழில்நுட்பத்தையும் இணைத்து செயல்படும் நிலையில் இருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு, மரபுசார் மருத்துவம், உடல் இயக்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்தும் கருவிகள் பயன்பாடு, ரோபோடிக் அறுவை சிகிச்சை ஆகியவற்றால் மருத்துவ சிகிச்சை வேகமாக முன்னேறி வருகிறது.
இந்த தொழில்நுட்ப பயன்பாட்டில் இளம் மருத்துவர்கள் முன் நிற்க வேண்டும். அதே சமயத்தில் அறநெறியோடு சிகிச்சை அளிக்க வேண்டும். இந்நாடு உங்களை ஒரு மருத்துவர் என்று மட்டுமே கருதாமல், ஒரு தலைவராகவும், கல்வியாளராகவும், புத்தாக்கல் படைப்பவராகவும் பார்க்கிறது. நீங்கள் சிகிச்சை செய்தாலும், ஆய்வுகளை மேற்கொண்டாலும், பொது சுகாதாரத்தில் இருந்தாலும், நிர்வாகம் செய்தாலும், உங்களுக்கு சமத்துவம், கிராம மக்களுக்கு பணியாற்றல், பெண்கள் உணர்வுகளை மதித்தல் போன்ற பண்புகள் வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக துணைவேந்தர் மருத்துவர் உமாசேகர் பேசும்போது, ``ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் தற்போது பன்னாட்டு தொடர்புகளை ஏற்படுத்தவும். வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கவும் மற்ற பல்கலைக்கழகங்களோடு இணைத்து பட்டங்களை வழங்கவும். தேவையானவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் முனைப்புகளை மேற்கொண்டுள்ளது.
ஆய்வுகளை மேற்கொள்ள சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கழகம், மேரி லாண்ட், மிச்சிகன், மலாயா பல்கலைக்கழகங்கள், ராக்கெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கொலரோடோ ஸ்டேட் பல்கலைக்கழகம் மற்றும் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி போன்றவற்றோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது'' என்றார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி மருத்துவர் கே.ஆர்.ரமேஷ், ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் கே.பாலாஜி சிங், பதிவாளர் மருத்துவர் எஸ்.செந்தில் குமார், தேர்வுகள் கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர்.ஜோதிமலர், நிதித்துறை இயக்குநர் ஜே.ரவிசங்கர் மற்றும் பிற துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT