Published : 26 Apr 2025 06:07 AM
Last Updated : 26 Apr 2025 06:07 AM

ஆளுநருக்கு எதிரான வழக்கில் திறம்பட வாதாடிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு முதல்வர் நாளை தேநீர் விருந்து

சென்னை: ஆளுநருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத்தந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை பாராட்டு விழா நடைபெறும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது. அந்த சட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

அதன் காரணமாக தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, பெரியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா, அண்ணா பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா உட்பட 10 மசோதாக்கள் அமலுக்கு வந்தன.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பெறுவதற்காக வழக்காடிய உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, ராகேஷ் திவேதி, எம்.பி.க்கள் அபிஷேக் சிங்வி, பி.வில்சன் ஆகியோருக்கு பாராட்டுவிழா, சென்னை கிண்டியில் ஏப்.27-ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x