Published : 26 Apr 2025 04:52 AM
Last Updated : 26 Apr 2025 04:52 AM

தொலைதூர கிராமங்கள், மலைப்பகுதிககளில் புதிதாக 13 ஆரம்ப பள்ளிகள்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: தொலைதூர கிராமங்கள், மலைப்பகுதிகள் மற்றும் புதிய குடியேற்றப் பகுதிகளில் புதிதாக 13 ஆரம்பப் பள்ளிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுசியாதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் இந்த துறைக்கென ரூ.2.24 லட்சம கோடி நிதி ஒதுக்கப்பட்டது. எனினும், நமது 5 ஆண்டுகால ஆட்சியில் மட்டும் ரூ.2.60 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறையில் இதுவரை 168 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 114 நடைமுறைக்கு வந்துவிட்டது. மேலும், 54 அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல், தேர்தல் வாக்குறுதியில் பள்ளிக் கல்வித் துறை சார்ந்து வழங்கப்பட்ட 32 வாக்குறுதிகளில் 24 நிறைவேற்றப்பட்டுள்ளது. எஞ்சியவற்றை நடைமுறைபடுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் என்பது இல்லை.

மேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரை 7.7 சதவீதம் இடைநிற்றல் இருக்கிறது. அதையும் படிப்படியாக குறைத்துவிடுவோம். தேசியக் கல்விக் கொள்கையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதகங்களை தரக்கூடிய பல்வேறு அம்சங்கள் உள்ளன. அதனால் அதை எதிர்க்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு பயிலும் 13 லட்சம் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் திறன் என்னும் முனைப்பு இயக்கம் ரூ.19 கோடியில் மேற்கொள்ளப்படும். இன்றைய சூழலில் பள்ளி மாணவர்களிடம் வாழ்வியல் திறன்கள், பாலினச் சமத்துவம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுகாதாரமான பழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.26 லட்சத்தில் கட்டகம் தயாரிக்கப்படும். இதற்காக பள்ளிகளின் வாராந்திர கால அட்டவணையில் ஒரு பாடவேளை ஒதுக்கப்படும்.

இதுதவிர மாற்றுத்திறன் மாணவர்களின் உடல் நலன் மற்றும் மன நலன் மேம்படுத்த தகுந்த விளையாட்டு சாதனங்கள் வழங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படும். 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

தொலைதூர கிராமங்கள், மலைப்பகுதிகள் மற்றும் புதிய குடியேற்றப் பகுதிகளில் புதிதாக 13 ஆரம்பப் பள்ளிகள் தொடங்கப்படும். மேலும், 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். மேலும், மாணவர்களை அதிகம் சேர்க்கும் அரசுப் பள்ளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இதுதவிர மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ளவும் கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாட நூல்கள் மாற்றி அமைக்கப்படும். இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் பொருட்டு 10, பிளஸ் 2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைதகள் ரூ.1 கோடியில் மொழிப்பெயர்க்கப்படும் என்பன உட்பட பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x