Published : 12 Jul 2018 02:15 PM
Last Updated : 12 Jul 2018 02:15 PM

ஜியோ பல்கலைக்கழகத்திற்கு உலகத் தரத் தகுதி; கல்வியை கடைகோடிச் சரக்காக மாற்றிய பாஜக: வேல்முருகன் குற்றச்சாட்டு

இல்லாத ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு உலகத் தரத் தகுதியளிப்பு ஏன் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 500 பல்கலைக்கழகங்கள் இடம்பெறும். அந்தப் பட்டியலில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் எதுவும் கிடையாது; அதில் இடம்பெற வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஆசையாகும்.

அதற்குக் காரணம், இந்தப் பட்டியல் கார்ப்பரேட்டுகளின் ஏற்பாடு என்பதுதான். இதனால் அந்தப் பட்டியலுக்குப் போட்டியிட 3 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கும் 3 தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் உலகத் தரத் தகுதி வழங்கியுள்ளது மத்திய அரசு.

அவை: அரசு பல்கலைக்கழகங்களான டெல்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மும்பை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனமமாகும். மற்றும் தனியாரின் பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்கல்வி நிறுவனம், ஜியோ பல்கலைக்கழகம் ஆகியவை.

அரசுப் பல்கலைக்கழகங்கள் 10 மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் 10 என மொத்தம் 20 பல்கலைக்கழகங்களை உலகத் தரமாக்க முடிவு செய்ததில், முதற்கட்டமாக இந்த 6 கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்துள்ளது முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமையிலான குழு. மீதம் 14 தகுதியான நிறுவனங்கள் இல்லை என்றிருக்கிறது அந்தக் குழு.

தேர்வு செய்த 6 பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜியோ பல்கலைக்கழகம் இல்லாத ஒன்று; அதைத் தேர்ந்தெடுத்த கோபாலசுவாமி குழுவுக்கு மீதி 14 நிறுவனங்களுக்கு எதுவும் தென்படாதது வியப்பை அளிக்கிறது. இல்லாத ஜியோ பல்கலைக்கழகம் ரூ.9,500 கோடி முதலீட்டில் 3 ஆண்டுகளில் தொடங்கப்படும் என்கிறது மத்திய அரசு.

உயர்கல்வியில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க உலகத் தரத் தகுதி அவசியம்; அதனாலேயே புதிய தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் அதை வழங்க முடிவு செய்யப்பட்டது; அப்படி விண்ணப்பித்த 11 நிறுவனங்களிலிருந்தே ரிலையன்ஸின் ஜியோ பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டது என்று கொள்கை முழக்கமும் செய்கிறது மத்திய அரசு. உண்மையில் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைதான் இதன் பின்னணியில் இருக்கும் கொள்கை.

உலகத் தரப் பல்கலைக்கழகங்களுக்கான அதிகாரங்கள், உரிமைகள், சலுகைகள் தனித்துவமானவை. பல்கலைக்கழக மானியக் குழுவால் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது; மாணவர் சேர்க்கையில் 30 விழுக்காடு இடங்களை வெளிநாட்டவருக்கு ஒதுக்கி கட்டணக் கொள்ளையே நடத்தலாம்.

25 விழுக்காடு வெளிநாட்டுப் பேராசிரியர்களையும் நியமனம் செய்யலாம். பட்டியலில் உள்ள 500 முன்னணி பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து கொள்ளலாம். அரசுப் பல்கலைக்கழகங்கள் என்றால் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,000 கோடி உதவி நிதி பெறலாம்.

எனவே, இந்த அதிகாரங்கள், உரிமைகள், சலுகைகள் மூலம் உலக அளவிலான கல்விச் சந்தையில் கோடானுகோடிகளைக் குவிக்கலாம். இதனால்தான் தனக்கு மிகவும் தேவையான ரிலையன்ஸை அதன் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு உலகத் தரத் தகுதி வழங்கியதன் மூலம் சிறப்பித்திருக்கிறது மத்திய அரசு.

நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி அளிப்பது என்றாலும் அந்த நிறுவனம் 10 ஆண்டுகளாக கல்விப் பணியில் இருக்க வேண்டும்; ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு சார்ந்த கல்வியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன; ஆனால் இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்திற்கே உலகத் தரத் தகுதி வழங்கி கல்வி வரலாற்றில் புதிய சரித்திரமே படைத்திருக்கிறது மத்திய பாஜக அரசு.

இந்தியாவில் 800 பல்கலைக்கழகங்கள் இருந்தும் ஒன்றுகூட உலகத் தரத்தில் இல்லை என்பது புரிந்துகொள்ளக்கூடியதே; ஆனால் மத்திய அரசு முனைப்புக் காட்டும் கார்ப்பரேட் உலகத் தரம் என்பது ஊரை ஏமாற்றும் வேலையே தவிர வேறல்ல.

கல்வியை கடைச்சரக்காக மட்டுமல்ல; கடைகோடிச் சரக்காகவே மாற்றி கொள்ளையடிப்பதுதான் கார்ப்பரேட் உலகத் தரத்தின் நோக்கம்; அதற்கு வழியமைக்கத்தான் இத்தனையும் செய்கிறது மத்திய பாஜக அரசு. இது ஆட்சியதிகாரம் நிலைக்கத் தேவையான கல்லாமையையும் இல்லாமையையையும் நிலைநிறுத்தவே எனத் தெளிவுபடுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி” என வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x