

தமிழகத்தில் நெல்லை, கோவை, தூத்துக்குடி ஆகிய 3 மாநகராட்சி மேயர்கள், 8 நகராட்சித் தலைவர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கான உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதி நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா, திருநெல்வேலி மேயர் விஜிலா சத்யானந்த் ஆகியோர் சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களாக பொறுப்பேற்றனர். அதற்காக மனு செய்யும்போது அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். கட்சியில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக கோயம்புத்தூர் மேயர் செ.ம.வேலுசாமியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனால் மேற்கண்ட மாநகராட்சிகளின் மேயர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.
புதுக்கோட்டை நகராட்சித் தலை வராக இருந்த கார்த்திக் தொண்ட மான், சங்கரன்கோவில் நகராட்சித் தலைவராக இருந்த முத்துசெல்வி உள்ளிட்டோர் அந்தந்த சட்டப்பேர வைக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.
மேற்கண்ட இடங்களில் நகராட்சித் தலைவர் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இதுபோல் கடலூர், கொடைக்கானல், ராமநாதபுரம், அரக்கோணம், குன்னூர் உட்பட மொத்தம் 8 நகராட்சித் தலைவர் பதவியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியிடங்களை நிரப்ப இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.
சென்னையில் கவுன்சிலராக இருந்த ஆர்.என்.வெங்கட்ராமன், ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாலும், ஞானசேகரன் என்ற கவுன்சிலர் உயிரிழந்ததாலும் 2 வார்டுகளில் (35 மற்றும் 166) உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இதுபோல், மதுரை மற்றும் கோவை மாநகராட்சிகளில் தலா 2 இடங்களும், தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரு இடமும் காலியாக உள்ளன.
இதுதவிர மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான உள்ளாட்சிப் பதவியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றுக்கு வரும் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு செப்டம்பர் 18-ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 28-ம் தேதி (வியாழன்) தொடங்கி, செப்டம்பர் 4-ம் தேதி முடிகிறது. வேட்புமனுக்களை சனிக்கிழமையும் தாக்கல் செய்யலாம். வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 22-ம் தேதி நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.