கோப்புப்படம்
கோப்புப்படம்

மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் - முதல்வர் அறிவிப்பு

Published on

சென்னை: “ஜூன் மாதம் முதல் நான்காம் கட்டமாக மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்களுக்கான பணிகள் தொடங்கும். தமிழகம் முழுவதும் 9,000 இடங்களில் இதற்கான பணிகள் நடைபெறவுள்ளது” என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.25) முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “கொமதேக உறுப்பினர் ஈஸ்வரன், தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பற்றி பேசினார். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய அந்த திட்டத்தின் அடிப்படையிலே, தமிழகத்தில் 1 கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

அதேநேரம், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டு போனவர்கள் குறித்த செய்தியும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது அரசின் கவனத்துக்கும் வந்திருக்கிறது. சட்டப்பேரவையில் அதுதொடர்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தின் அடிப்படையிலே, பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, உடனடியாக அந்த கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

வருகிற, ஜூன் மாதம் முதல் நான்காம் கட்டமாக‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தின் அடிப்படையிலே, அந்த கோரிக்கைகளைக் கேட்கக்கூடிய பணிகளைத் தொடங்கவிருக்கிறோம். 9,000 இடங்களில் அந்தப் பணி நடைபெறவிருக்கிறது. அந்த சமயத்தில், கலைஞர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் விடுபட்டு போயிருக்கிறதோ, அவர்கள் முறையாக விண்ணப்பித்தால், நிச்சயமாக விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும்." இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in