

சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இந்தியாவிலேயே பல்வேறு சாதனைகளை மருத்துவத்துறையில் செய்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி அஸ்விணிக்கு ரோபோடிக் மூலம் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினரை பாராட்டினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இந்தியாவிலேயே பல்வேறு சாதனைகளை மருத்துவத்துறையில் செய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் கூட தேசிய முதியோர் நல மருத்துவமனையில் அவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு சிகிச்சைகள் குறித்து அறிந்துக் கொள்வதற்கும் பயிற்சி பெறுவதற்கும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி என்கின்ற வகையில் 17 மாநிலங்களிலிருந்து 41 மருத்துவர்கள் 3 நாட்கள் இங்கு பயிற்சி பெறுவதற்கு வருகை புரிந்து பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் ஏற்கெனவே குஜராத்தில் இருந்து 120 மருத்துவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகளை வியந்து பாராட்டி சென்றார்கள். கடந்த ஆண்டு மேகாலாயா மாநிலத்திலிருந்து மகப்பேறு மருத்துவத்திற்கு பயிற்சி பெறுவதற்கு 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இங்கேயே தங்கியிருந்து பயிற்சி பெற்று சென்றார்கள் இப்படி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கூட தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறையின் மருத்துவச் சேவைக்கு வருகை புரிந்து பயிற்சி பெறுவதற்கான தேவைகள் இருந்துக் கொண்டிருக்கிறது.
முதல்வர் 2022 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி ஓமந்தூரார் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் Robotic cancer equipment மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ரூ.34.50 கோடி மதிப்பிலான அந்த இயந்திரம் இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்திலும் மாநில அரசு மருத்துவமனையிலும் இல்லாத ஒன்று. எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற ஒன்றிய அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அக்கருவி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அந்த சேவை தொடங்கப்பட்ட நாள்முதல் தற்போது வரை இருதயம், புற்றுநோய், தைராய்டு, வயிறு மற்றும் குடல் அறுவை சிகிச்சைகள் என்று 362 சிகிச்சைகளை தொடர்ந்து செய்து சாதனைப் படைத்து வருகிறது. ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனியார் மருத்துவமனையில் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும்.
இன்றைக்கு அந்த மருத்துவச் செலவு முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் 362 அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக நடைபெற்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டவர்கள் அனைவருமே மிகவும் சிறப்பாக நலமுடன் இருந்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் இந்திய அளவில் புகழ்மிக்க சாதனைகளை செய்து இருக்கிறார்கள்.
கடந்த 03.04.2025 அன்று இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதல்முறையாக ரோபோடிக் உதவியுடன் இதய துவார அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்கள். சென்னை, மேடவாக்கம் பகுதியைச் சார்ந்த அஸ்வினி என்கின்ற 16 வயது மாணவி தற்போது ஆலந்தூர் பகுதியில் வசித்து கொண்டிருக்கிறார். அவருக்கு இருதயத்தில் இருந்த துவாரத்தை ரோபோட்டிக் உதவியுடன் இன்றைக்கு வெற்றிகரமாக செய்து முடித்து இருக்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சை செய்து பல மாதங்கள் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும்.
அந்த சிகிச்சைக்கு பிறகு பெரிய அளவிலான தழும்பு உடல் மறைகின்ற வகையில் இருக்கும். எனவே அறுவை சிகிச்சை இல்லாமல் மிகச் சிறிய தழும்போடு இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.18 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலவாகும். இந்த சிகிச்சையும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின்மூலம் செய்யப்பட்டிருக்கிறது. ஒன்றிய, மாநில அரசு மருத்துவத்துறை வரலாற்றிலேயே வெற்றிகரமாக செய்யப்பட்டிருக்கிறது.
குறிப்பாக DA VINCI ROBOT Xiயை பயன்படுத்தி சுமார் 100 புற்றுநோய் நோயாளிகளுக்கும், 60க்கும் மேற்பட்ட இதய நோயாளிகளுக்கும் ரோபோட் உதவியுடனான அறுவை சிகிச்சையால் (Robotic Assisted surgery) செய்யப்பட்டுள்ள இந்த கருவியின் மூலம் பயனடைந்திருக்கிறார்கள். இப்படி தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமே இந்திய வரலாற்றிலேயே ஒரு மிகச் சிறந்த சாதனையை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர்கள் செய்திருக்கிறார்கள்.
அந்தவகையில் அன்புத்தங்கை அஸ்வினி என்பவர் இந்த சிகிச்சையின் மூலம் பயன்பெற்று நலமுடன் இருக்கிறார், அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது, இந்த அறுவை சிகிச்சையினை மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு மருத்துவத்துறையின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.