

சென்னை: காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தை பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்துவதாக பாஜக மீது விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விசிக சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலருக்கு விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, அம்பேத்கர் சுடர் விருதுக்கு திராவிடர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.எஸ்.சலன், பெரியார் ஒளி விருதுக்கு நடிகர் சத்யராஜ், காமராஜர் கதிர் விருதுக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம், மார்க்ஸ் மாமணி விருதுக்கு தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, காயிதே மில்லத் பிறை விருதுக்கு தமிழ்நாடு ஜமாத் உலமா சபைத் தலைவர் காஜாமொய்தீன் பாகவி, செம்மொழி ஞாயிறு விருதுக்கு இலங்கை தமிழறிஞர் பேராசிரியர் சண்முகராஜ், அயோத்திதாசர் ஆதவன் விருதுக்கு பவுத்த ஆய்வறிஞர் முனைவர் ஜம்புலிங்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெறும். விழா நாள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்து கூறியதாவது: காஷ்மீரில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். இது அரசியல் நோக்கத்தில் அல்லாமல் நாட்டின் பாதுகாப்பை முன்னிறுத்தி வைக்கக் கூடிய கருத்து.
அரசமைப்புச் சட்டம் 370-ஐ நீக்கினால் கூட பயங்கரவாதம் தொடரும் என்பதைத் தான் கொடூர நிகழ்வு உணர்த்துகிறது. சவூதி அரேபியா பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிரதமர், சம்பவ இடத்துக்கு செல்வார் என எதிர்பார்த்தால் பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது. இந்த தாக்குதலை பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதே கசப்பான உண்மை.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற பேரில் நடத்தப்படும் தாக்குதலில் பழங்குடியினரே படுகொலை செய்யப்படுகிறார்கள். அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. இதை நிறுத்திவிட்டு மாவோயிஸ்ட் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அங்குள்ள வளங்களை ஆக்கிரமிக்கவே தாக்குதல் நடத்தப்படுவதாக மாவோயிஸ்ட் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
இப்படி இந்தியாவில் நிலவும் அமைதியின்மைக்கு மத்திய அரசுக்கு பொறுப்பேற்க வேண்டும். இதுபோன்ற சம்பவத்தின்போது இந்தியராய் ஒன்றிணைவோம் என பேசும் பாஜகவினர், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கின்றனர்.
மத நல்லிணக்கத்தை உயர்த்தி பிடிக்க சங்பரிவார்கள் முன்வர வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். கல்வி நிறுவனங்களில் சாதிய பிரச்சினையை களைய நீதிபதி சந்துரு அறிக்கை பரிந்துரை அடிப்படையில் சட்டமியற்ற வேண்டும்.
கட்சிக் கொடி கம்பங்களை அகற்றும் தீர்ப்பை எதிர்த்து விசிக மேல்முறையீடு செய்யவிருக்கிறது. தமிழக அரசும் வழக்குத் தொடர வேண்டும். துணைவேந்தர் மாநாட்டின் மூலம் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு, துணைவேந்தர்களுக்கு தேவையற்ற நெருக்கடியை ஆளுநர் உருவாக்குகிறார். துணை குடியரசுத் தலைவர் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.