

தமிழகத்தில் 16 வயதுக்குட்பட்ட பதின்பருவத்தினர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன் (அறந்தாங்கி) பேசியதாவது:
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க வேண்டும். பதின்ம வயது குழந்தைகளிடம் சமூக வலைதளங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல்வேறு நாடுகளில் 16 வயதுக்கு குறைந்த குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல், நமது மாநிலத்திலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
நகர்ப்புற, மேல்தட்டு மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ‘குட் டச்’, ‘பேட் டச்’ தொடர்பான பாலியல் புரிதல்களை விளக்கி விடுகிறார்கள். ஆனால், கிராமப்புற மக்களிடம் இதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே, பாடப்புத்தக அட்டையின் உட்புறத்தில் ‘குட் டச்’, ‘பேட் டச்’ தொடர்பான விளக்கப் படங்களையும், வெளிப்புறத்தில் குழந்தைகளுக்கான 1098 போன்ற உதவி மைய எண்களையும் அச்சிட்டு வழங்க வேண்டும். மகளிர் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகள் வசதிகள் செய்து தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ‘‘நலம் நாடி என்ற செயலி மூலமாக 21 வகையான குறைபாடுகளை கண்டறிந்து வருகிறோம். அந்தவகையில் 96,082 பேர் கண்டறியப்பட்டனர். அதில் மிகவும் கண்காணிப்பு தர வேண்டிய 17,676 பிள்ளைகளுக்கு இயன்முறையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவத்தையும் வழங்கி வருகிறோம். அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் உறுதி செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.