துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடக்கம்: போராட்ட அறிவிப்புகளால் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊட்டி

ஊட்டி ராஜ்பவன் நுழைவுவாயிலில் போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டி ராஜ்பவன் நுழைவுவாயிலில் போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Updated on
1 min read

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்கும் நிலையில், ஆளுநருக்கு எதிரான போராட்ட அறிவிப்புகளால் ஊட்டியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார். இதில், கலந்து கொள்வதற்காக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10.35 மணிக்கு கோவை வருகிறார்.

பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். பின்னர் காரில் புறப்பட்டு, ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்று அவர் சிறப்புரையாற்றுகிறார்.

இதற்கிடையே, துணைவேந்தர்கள் மாநாட்டை அறிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஊட்டி காபி ஹவுஸ் முன்பு மாவட்டத் தலைவர் கணேஷ் தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல, தந்தை பெரியார் திராவிடர் கழகம், துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆளுநரைக் கண்டித்து ஊட்டி ராஜ்பவனை முற்றுகையிடப் போவதாக தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஊட்டி ராஜ்பவன், தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம், குடியரசு துணைத் தலைவர் வரும் சாலை, தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் போலீஸ் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு அங்கு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்துக்காக வருபவர்களை அந்தந்த இடங்களிலேயே கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் போலீஸார் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in