அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் தங்கைக்கு மாநகராட்சி பணி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிழந்தவரின் சகோதரிக்கு மதுரை மாநகராட்சி மேயர், ஆணையர் தற்காலிக பணி நியமன ஆனையை வழங்கினர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிழந்தவரின் சகோதரிக்கு மதுரை மாநகராட்சி மேயர், ஆணையர் தற்காலிக பணி நியமன ஆனையை வழங்கினர்.
Updated on
1 min read

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமாரின் தங்கைக்கு மாநகராட்சி தற்காலிக பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை மேயர் இந்திராணி, ஆணையர் சித்ரா பயனாளிக்கு வழங்கினார்.

நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் நவீன்குமார் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் மாநகராட்சி அதிமுக எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதைய மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

உயிரிழந்த நவீன்குமார் குடும்பத்திற்கு நிவாரண உதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு மாநகராட்சி பணியும் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். அவர்கள் கோரிக்கையை ஆணையர், தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு சென்றார். அதன் அடிப்படையில் தமிழக அரசு வழங்கிய ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையை உயிரிழந்த மாடி பிடி வீரர் நவீன்குமார் குடும்பத்திற்கு அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். ஜல்லிக்கட்டில் உயிரிழந்த நபர் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டத, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து தற்போதைய ஆணையர் சித்ராவிடம், மாடுபிடி வீரர் நவீன்குமார் குடும்பத்தில் ஒருவருக்கு மாநகராட்சி பணி கிடைக்க ஏற்பாடு செய்யும்படி சோலைராஜா வலியுறுத்தி வந்தார். ஆணையர் சித்ரா, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து, நவீன்குமாரின் தங்கை ஆர்த்திக்கு அவனியாபுரம் மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளர் பணி கிடைக்க ஏற்பாடு செய்தார். இன்று இந்தப் பணி ஆணையை மேயர் இந்திராணி, ஆணையர் சித்ரா ஆகியோர், ஆர்த்திக்கு வழங்கினர். அப்போது மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா, ஜல்லிக்கட்டில் உயிரிழந்த நவீன்குமார் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in