

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.24) தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியது: “பேரவை உறுப்பினர்கள், அவை முன்னவர், அதேபோல், பேரவைத் தலைவர் ஆகியோர் விதி எண் 55-ஐப் பயன்படுத்தி மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரால் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டுமென்று தங்களுடைய கருத்துகளை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும், கல்லூரிகளாக இருந்தாலும், அவையெல்லாம் இன்றைக்கு வளர்ந்து, மேலோங்கி மற்ற மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக, ஏன், உலக அளவிலே இன்றைக்குப் பாராட்டப்படக் கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. நாட்டிலேயே முதல் இடத்திற்கு வந்திருக்கக்கூடிய அந்தக் கல்வி நிலையங்கள் எல்லாம் உருவாவதற்குக் காரணமாகப் பல்வேறு தலைவர்கள் இருந்தாலும், அவர்களிலே முக்கியமான தலைவர்களில் ஒருவராக மறைந்த முதல்வர் கருணாநிதி விளங்கிக் கொண்டிருக்கிறார்.
விரைவில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய கும்பகோணத்தில் அவரது பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்,” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.