அழகர்கோவில் வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கோரிய மனு  தள்ளுபடி

அழகர்கோவில் வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கோரிய மனு  தள்ளுபடி
Updated on
1 min read

மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் அழகர்கோவில் வனப்பகுதியில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தியபட்டியைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: 'திண்டுக்கல் மாவட்டம் பட்டணம்பட்டி, கடமிட்டான்பட்டி, கேசம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சுற்றிலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள், சிறுத்தைகள், யானைகள், பறக்கும் அணில்கள் மற்றும் பல அறிய வகை விலங்குகளும், பறவை இனங்களும் உள்ளன. சுமார் 60.83 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த காடு அமைந்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருப்பினும், பட்டணம்பட்டி அருகே விதிமீறி பல அரிய, மதிப்புமிக்க மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கும் நிலையும் ஏற்படும். அரசுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே திண்டுக்கல், பட்டணம்பட்டி பாதுகாக்கப்பட்ட அழகர் கோவில் வனப்பகுதி அருகே சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "ஏற்கெனவே இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in