2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தம்: அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்தளித்த பழனிசாமி

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தம்: அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்தளித்த பழனிசாமி
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகும் விதமாக, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கட்சி எம்எல்ஏக்களுக்கு நேற்று விருந்து அளித்து உற்சாகப்படுத்தினார்.

கடந்த 2019 முதல் தமிழகத்தில் பல்வேறு தேர்தல்களில் தோல்வியை தழுவி வரும் பழனிசாமி, வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதனால் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே பாஜகவுடனான கூட்டணியை உறுதி செய்துவிட்டார்.

அதிமுக எம்எல்ஏக்களும் கடந்த 4 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2024 மக்களவை தேர்தல் எதிலும் அதிமுக வெற்றி களிப்பின்றி சோர்ந்துள்ளனர். எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் மாவட்ட செயலாளர்களாகவும் உள்ளனர். இந்தநிலையே தொடர்ந்தால், 2026 தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை பழனிசாமி உணர்ந்துள்ளார்.

மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தினந்தோறும் புதுப்புது பிரச்சினைகளுடன் வந்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் எம்எல்ஏக்கள் சிலர் அதிருப்தியிலும் உள்ளனர்.

இந்நிலையில், அனைத்துக்கும் ஒரு சேர மருந்து போடும் விதமாக அதிமுக எம்எல்ஏக்களுக்கு பழனிசாமி விருந்தளிக்க முடிவு செய்து அனைவரையும் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு நேற்று அனைவரையும் வரவழைத்து, அசைவ விருந்து வழங்கி உற்சாகப்படுத்தினார்.

இந்த விருந்தில் மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வருவல், மட்டன் சுக்கா,முட்டை, இறால் தொக்கு உள்ளிட்டவை பரிமாறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சைவப் பிரியர்களுக்கு இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, அரிசி சாதம், சாம்பார், ரசம், பொரியல் போன்றவை பரிமாறப்பட்டுள்ளது. இந்த விருந்தில், எம்எல்ஏக்களுடன் சேர்ந்து பழனிசாமியும் உணவருந்தினார்.

அப்போது எம்எல்ஏக்களிடம் பேசிய பழனிசாமி, "2026 தேர்தலுக்காக நாம் இன்னும் வேகமாக ஓட வேண்டியுள்ளது. இதை மனதில் வைத்து, எம்எல்ஏக்கள் அனைவரும், தினந்தோறும் மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்துங்கள். இந்த விருந்தில் உங்கள் முகத்தில் படர்ந்துள்ள அதே உற்சாகத்தோடு, 2026 தேர்தல் வரை பணியாற்றி, அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருங்கள்" என்று தெரிவித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in