உத்தபுரம் கோயில் திருவிழாவில் குறிப்பிட்ட சமூகத்தினர் பொங்கல் வைக்க அனுமதி மறுப்பு

உத்தபுரம் கோயிலில் பொங்கல் வைப்பதற்காக திரண்ட ஒரு சமூகத்தினர்.
உத்தபுரம் கோயிலில் பொங்கல் வைப்பதற்காக திரண்ட ஒரு சமூகத்தினர்.
Updated on
1 min read

மதுரை: ஏறத்தாழ 9 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தபுரத்தில் கோயில் திறக்கப்பட்டு திருவிழா தொடங்கிய நிலையில், குறிப்பிட்ட சமூகத்தினரை பொங்கல் வைக்க அனுமதி மறுத்ததால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து திருவிழா நிறுத்தப்பட்டது. மேலும், கோயிலைப் பூட்டி போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் முத்தாலம்மன், மாரியம்மன் கோயில்கள் உள்ளன. கோயிலில் வழிபடுவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக கோயில் பூட்டப்பட்டதுடன், கடந்த 9 ஆண்டுகளாக திருவிழாவும் நடக்காமல் இருந்தது.

இதற்கிடையே, கோயில் திருவிழாவை நடத்தக் கோரி உத்தபுரத்தைச் சேர்ந்த பாண்டி, உயர்நீதி மன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘அனைத்து சமூகத்தினரும் கோயிலில் எந்த வேறுபாடுமின்றி சுவாமி தரிசனம் செய்யலாம்’ என உத்தரவிட்டது.

இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் கோயில் திறக்கப்பட்டதுடன், 3 நாள் பங்குனி திருவிழாவும் தொடங்கியது. குறிப்பிட்ட சமூக மக்கள் திருவிழாவில் நேற்று பொங்கல் வைத்து வழிபாடுகளை நடத்தினர். இதைத் தொடர்ந்து மற்றொரு சமூக மக்கள் பொங்கல் வைக்க முயன்றனர். ஆனால், அவர்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். நீதிமன்ற உத்தரவில் பொங்கல் வைக்க அனுமதி வழங்கவில்லை என அந்த சமூக மக்களிடம் போலீஸார் அறிவுறுத்தியதற்கு எதிர்ப்புக் கிளம்பியது.

"எங்களது உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம். பொங்கல் படைத்து வழிபட அனுமதிக்க வேண்டும்" என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. 3 கட்டப் பேச்சுவார்த்தையிலும் முடிவு ஏற்படவில்லை. தொடர்ந்து கோயிலைச் சுற்றிலும் குறிப்பிட்ட சமூக மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறை அறிவுறுத்தினர்.

ஆனாலும், நீதிமன்ற உத்தரவுப்படி சம உரிமையோடு கோயிலில் நாங்கள் பொங்கல் படைப்போம் என கூறினர். அவர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்து ஊர்வலமாக கோயிலை நோக்கிச் சென்றனர். இதைத் தொடர்ந்து கோயிலைச் சுற்றிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தகவலறிந்த தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா, எஸ்.பி. அரவிந்த உள்ளிட்டோர் அங்கு விரைந்தனர். காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை. பதற்றமான சூழல் காரணமாக நேற்று பிற்பகலில் திருவிழா நிறுத்தப்பட்டதுடன், கோயில் பூட்டப்பட்டு காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in