Published : 24 Apr 2025 03:34 AM
Last Updated : 24 Apr 2025 03:34 AM

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கு தமிழக அரசு அனுமதி

சென்னை: சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்தை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டதால், மெட்ரோ ரயில் திட்டத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே 15.5 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படும் அரசு அறிவித்தது. இத்தடத்தில், நெடுஞ்சாலைத் துறை மேம்பாலமும் அமைய இருந்ததால், பாலம் வடிவமைப்பு மற்றும் நிலம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கிடையே, மாநில நெடுஞ்சாலை மற்றும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுடன் தமிழக அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அதற்குப் பின்னர், சிறு திருத்தங்களுடன் விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பு தொடர்பாக புதிய திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த அறிக்கை தமிழக அரசிடம் கடந்த பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், பங்கு பகிர்வு அடிப்படையில் நிதி மற்றும் ஒப்புதலுக்காக, மத்திய அரசுக்கு தமிழக அரசு தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.9,445 கோடி: இத்திட்டத்தில், விமான நிலையம், பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி நகர், திரு.வி.க. நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கங்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என 13 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. மெட்ரோ ரயில் பாதை, மேம்பால பாதை, மெட்ரோ ரயில் பணிமனை போன்றவற்றுக்கு ரூ.9,445 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவன வட்டாரத்தில் கேட்டபோது, "நிலம் கையகப்படுத்தும் செயல்முறையைத் தொடங்க, எங்களுக்கு மற்றொரு அறிவிப்பு தேவை, அதற்கு 6 மாதங்கள் ஆகும். அது முடிந்ததும், கையகப்படுத்தும் பணி தொடங்கப்படும், இப்பணி குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடிக்கும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x