Published : 24 Apr 2025 03:27 AM
Last Updated : 24 Apr 2025 03:27 AM
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில் மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்து, சாட்சி விசாரணையை தொடங்கி 6 மாதத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக்குமாறு வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவிப்பி்ல் ஈடுபட்டதாக கடந்த 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன், மனைவி சாந்தகுமாரி, மகன் கதிர் ஆனந்த் எம்.பி., மருமகள் சங்கீதா மற்றும் சகோதரர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2013-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகைகளை விளக்கி வாதிட்டார்.
துரைமுருகன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, குடும்பத்தினர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் தங்கள் வாதத்தில் கூறியதாவது:
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களின் தனிப்பட்ட தொழில், குடும்ப வருமானத்தை அமைச்சர் துரைமுருகனின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக வாங்கப்பட்ட சொத்துகளும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. குடும்பத்தினரை, அமைச்சரின் பினாமி என்று கூற எந்த ஆதாரமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தனித்தனியாக, முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். அவற்றை லஞ்ச ஒழிப்புத் துறையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்து கொண்ட அதிகாரி விசாரிக்க வேண்டிய இந்த வழக்கை, அதிகார வரம்பே இல்லாத காவல் ஆய்வாளர் புலன் விசாரணை செய்துள்ளார். வழக்கு தொடர சட்டப்படி முறையான அனுமதி பெறப்படவில்லை. இதை எல்லாம் கருத்தில் கொண்டே, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மறுஆய்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இதை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையின் மறுஆய்வு மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் மீண்டும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, சாட்சி விசாரணையை தொடங்கி வேலூர் சிறப்பு நீதிமன்றம் 6 மாதத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT