Published : 23 Apr 2025 07:04 PM
Last Updated : 23 Apr 2025 07:04 PM
சென்னை: “நல்ல நோக்கத்துடன் நடத்தப்படும் கல்விச் செயல்பாட்டை தவறாக விளக்கி, நீதிமன்ற தீர்ப்புடன் இணைத்து, தமிழக ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான மோதலாக கட்டமைக்க முயற்சி மேற்கொள்வது வருந்தத்தக்கது” என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சமீப நாட்களில் மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் ஆண்டு மாநாட்டை ஆளுநர் மாளிகை மற்றும் மாநில அரசுக்கு இடையிலான அதிகார மோதல் எனத் தவறாக செய்திகள் பரப்பப்படுகிறது. இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில், தமிழக ஆளுநரால் உயர் கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் மாநாடு திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில், தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள கல்வி மற்றும் தொழில்துறையை சேர்ந்த சிறந்த நிபுணர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் கல்வி நிறுவனங்களை முன்னேற்றும் புதிய சவால்கள், வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பற்றி விவாதிக்கப்படுகின்றன. மாணவர்கள் மற்றும் மாநில வளர்ச்சிக்காக அவர்களது நிறுவனங்களை எப்படி போட்டித் திறன் வாய்ந்ததாக மாற்றலாம் என்பது குறித்தும் உரையாடல்கள் நடைபெறுகின்றன. இம்மாநாடுகளின் நேரடி பலன்கள், கணக்கீடு செய்யக்கூடிய அளவுகோல்களில் தற்போது தெளிவாக தெரிகிறது.
முன்னர், குறிப்பாக மாநில பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக செயல்பட்டு ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இல்லாமல் செயல்பட்டன. இது மாணவர்களுக்கு இழப்பாகவும், கல்வி வளர்ச்சிக்குப் பாதகமாகவும் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் மாநாட்டுக்கான திட்டமிடல் சில மாதங்கள் முன்னதாகவே தொடங்கப்படுகிறது.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் கல்வி, தொழில்நுட்ப நிபுணர்களுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டு மாநாட்டின் வடிவம், விவாதிக்கப்படும் தலைப்புகள் மற்றும் உரையாற்ற வேண்டிய நிபுணர்கள் குறித்து முடிவெடுக்கப்படுகிறது. அவர்களை முன்கூட்டியே தொடர்புகொண்டு பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டும் ஜனவரி மாதமே தயாரிப்புகள் தொடங்கப்பட்டது. பல கூட்டங்கள் நடத்தப்பட்டு பயனுள்ள மாநாடாக மாற்றப்பட்டுள்ளது.
கல்வி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்காக நடத்தப்படும் நன்னெறி மற்றும் நல்ல நோக்கத்துடன் நடத்தப்படும் கல்விச் செயற்பாட்டை, தவறாக விளக்கி, சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புடன் இணைத்து, இதை தமிழக ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான மோதலாக கட்டமைக்க முயற்சி மேற்கொள்வது வருந்தத்தக்கதாகும். இவை அனைத்தும் மாண்பை குலைப்பதாகவும், உண்மைக்கு புறம்பாகவும் இருக்கிறது. என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT